கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது. முதலாம் அலை, இரண்டாம் அலை என தொடர் கொரோனா அலையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். சுகாதார ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


முதலாம் அலையை ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாக பதிவாகின. தற்போது, கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது.


இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில், இரண்டாம் கொரோனா அலையின்போது, நொய்டாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்ததற்கு ஐந்து மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் ரெம்டெசிவிர் ஊசியை வாங்கிய போதிலும், மருத்துவமனையில் சரியான நேரத்தில் அவருக்கு ரெம்டெசிவிர் ஊசி போடப்படவில்லை என கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அந்த இளைஞரின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.


காஜியாபாத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். கௌதம் புத் நகரின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் திகம் சிங் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304A (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) கீழ் காவல் நிலையத்தில் யதர்த் மருத்துவமனை மருத்துவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


அவர்களின் புகாரை விசாரித்து, குற்றச்சாட்டுகள் உண்மை என திகம் சிங் தலைமையிலான விசாரணை குழு கண்டறிந்துள்ளது. இருப்பினும், யதர்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கபில் தியாகி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என கூறியுள்ளார். 


இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "நோயாளி ஆபத்தான நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அரை மணி நேரம் தாமதித்திருந்தால், நோயாளி உயிர் பிழைத்திருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்.


ஆனால், இங்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சுமார் 35 நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தினர் அவரை டெல்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


கடந்த ஆண்டு தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது சவாலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சிறப்பாகவே பணியாற்றினர். 


ரெம்டெசிவிர் ஊசியை சரியான நேரத்தில் வழங்கவில்லை என்ற குடும்பத்தின் குற்றச்சாட்டை கருத்தில் எடுத்து கொண்டாலும், கொரோனா வைரஸ் சிகிச்சையில் அந்த ஊசி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவர்களின் குடும்பம் ஒருவரை இழந்துவிட்டது. அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்றார்.