கடந்தாண்டு ஏற்பட்ட பெருந்தொற்று காலம் தொடங்கி தற்போது வரை வெளிநாடுகளின் பணி செய்த 15 லட்சம் பேர் கேரளா திரும்பியுள்ளதாக அம்மாநில வெளிநாடுவாழ் பணியாளர்கள் துறை தெரிவித்தது. இதில், 10.45 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பின்மை இல்லாத காரணத்தினால் தாயகம் திரும்பியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதில் எத்தனை விழுக்காடு மக்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர் என்பது குறித்த தகவலை கேரளா அரசு முறையாக சேகரிக்கவில்லை. இருப்பினும், கணிசமான மக்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்த ஏப்ரல் மாதம் வரை, கேரளா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகளின் எண்ணிக்கை மட்டும் 27.20 லட்சம் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக, இந்த எண்ணிக்கை 5 முதல் 6 லட்சம் என்றளவில் தான் இருக்கும்.
புனித பயணம் மற்றும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா தடை விதிக்கப்பட்ட நிலையில், பெருந்தொற்று காலத்தில் தாயகம் திரும்பியவர்களில் கணிசமானோர் மீண்டும் வளைகுடா நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உலகளவில் 20 லட்சம் கேரளா தொழிலாளர் கடல் கடந்து பணிபுரிந்து வருகின்றனர். இதில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வளைகுடா நாடுகளிலும், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் உள்ளனர். 2014-ம் ஆண்டில் தகுந்த குடிபெயர் அனுமதியுடன் சென்ற 24.00 லட்ச மொத்த தொழிலாளரில், 8.9 லட்சம் யுனைடெட் அரபு எமிரேட்சுக்கும், 5.2 லட்சம் சௌதி அரேபியாவுக்கும், 1.89 லட்சம் பேர் ஓமனுக்கும். 1.88 பேர் கத்தாருக்கும், 1.06 லட்சம் பேர் குவைத்துக்கும் சென்றுள்ளனர்..
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வோரில் பெரும்பாலோர் திறனில்லா மற்றும் அரைகுறை திறன் பெற்ற தொழிலாளரே, இவர்கள் பெரும்பாலும் தங்களது வேலை ஒப்பந்தம் முடிந்ததும் இந்தியாவிற்குத் திரும்பும் ஒப்பந்தப் பணியாளர்கள். கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தியது.
கொரோனா முதலாவது அலை காரணமாக, அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் பல்வேறு பொருளாதாக நெருக்கடியை சந்தித்தன. குறிப்பாக, உலக நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியதால் உற்பத்திகள் குறையத் தொடங்கின. வரலாற்றில் இல்லாத வகையில் பெட்ரோல்/டீசல் விலை சரியத் தொடங்கியது. இதனால், வளைகுடா நாடுகளில் அரசு மற்றும் தனியார் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதன் காரணமாக, அந்தந்த நாடுகளில் பணிபுரியும் திறனற்ற தொழிலாளர்கள் தாயக நாட்டிற்கு திரும்பத் தொடங்கினர்.
கேரளாவின் பொருளாதாரம் என்ன?
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாயில், 30 விழுக்காடு வருவாய் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கேரளா தொழிலாளர்கள், தங்கள் வீடுகளுக்குப் பணம் அனுப்பும் மூலம் கிடைக்கிறது. இந்தியாவில், மற்ற மாநிலங்களை விட கேரளாவில் பொதுவுடைமைக் கட்சியின் தாக்கம் அதிகமிருந்தாலும், அதன் அரசியல் பொருளாதாரம் சற்று வித்தியாசமாகவே உள்ளது. ஏனெனில், அங்கு பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், மற்றும் வேளாண்மை பணிகளில் ஈடுபடவில்லை. மாறாக, கேரளாவின் அடிப்படை பொருளாதாரம் சர்வீஸ் செக்டார் மற்றும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களை நம்பியே உள்ளது.