கொரோனாவுக்கு எதிரான ஆங்கில (அலோபதி) மருத்துவத்தின் செயல்திறன் குறித்து யோகா குரு ராம்தேவ் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க தடுப்பூசி மட்டும் போதாது என்றும் அவர்களுக்கு யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


 






கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை எடுத்துக் கொண்ட பிறகும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏன் கொரோனா ஏற்பட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார். 


"யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் ஆதரவு இல்லாமல், எந்த தடுப்பூசியும் உங்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக நிரந்தரமாக நோய்த்தடுப்பு அளிக்க முடியாது. நீங்கள் எவ்வளவு பெரிய அதிபராக இருந்தாலும் அல்லது பெரிய மருத்துவராக இருந்தாலும் சரி" என்று ராம்தேவ் கூறியுள்ளார்.


உலக சுகாதார அமைப்பின் உயர் அலுவலர்களும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிகள் என்ற பெயரில் மருத்துவ அறிவியலால் உலகம் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். 


"உலகம் மீண்டும் யோகா மற்றும் ஆயுர்வேதத்திற்கு திரும்பும். மக்கள் தங்கள் சமையலறை தோட்டங்களில் துளசி, கற்றாழை மற்றும் சீந்தில் ஆகியவற்றை வளர்த்து, அவற்றின் ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவார்கள்” என ராம்தேவ் தனது நெருங்கிய உதவியாளர் பால்கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பதஞ்சலி யோகபீடத்தில் நடந்த விழாவில் பேசியுள்ளார்.


ஆங்கில மருத்துவத்திற்கு எதிராக ராம்தேவ் இப்படி பேசுவது முதல்முறை அல்ல. இதேபோன்று அவர் முறை பேசியுள்ளார். கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், ஆங்கில (அலோபதி) மருத்துவம் காரணமாக லட்சக் கணக்கான கொரோனா நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என கூறியிருந்தார்.


மேலும், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என அவர் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது இந்தகருத்துக்கு அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண