சமூக வலைதளங்களில் வித்தியாசமான சில சம்பவங்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒருவர் எழுதியுள்ள விடுமுறை கடிதம் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் அவர் தன்னுடைய விடுமுறைக்காக கூறியுள்ள காரணம் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் அகமத். இவர் அரசாங்க ஊழியராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய உயர் அதிகாரி ஒருவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இவர் தனக்கு விடுமுறை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அவர் ஒரு காரணத்தை கூறியுள்ளார்.
அதன்படி, “எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ஒரு சண்டை ஏற்பட்டது. அந்தச் சண்டையின் பின்பு அவர் என்னுடைய மகன் மற்றும் மகளை அழைத்து கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆகவே அவரை திரும்ப அழைத்து வர நான் செல்ல உள்ளேன். இதன்காரணமாக வரும் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நான் விடுப்பு எடுக்க உள்ளேன்” என்று எழுதியுள்ளார்.
அவரின் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இந்த கடிதம் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த விடுப்பு கடிதம் தொடர்பாக பலரும் வியந்து பார்த்து வருகின்றனர். ஒரு சிலர் இதுபோன்ற வித்தியாசமான சம்பங்கள் உத்தர பிரதேசத்தில் மட்டும் தான் நடக்கும் என்று சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கான்பூரைச் சேர்ந்த 1ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் பென்சில், மேகி உள்ளிட்ட பொருட்களின் விலையை ஏற்றியுள்ளது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதம் மிகவும் வேகமாக வைரலானது. இந்தச் சூழலில் தற்போது கான்பூரிலிருந்து மேலும் ஒரு கடிதம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்