நாட்டில் 21 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 7 கோடிக்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்களும் அதற்கு மேற்பட்ட வகை வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை, வாகனங்கள் குறித்த மத்திய அரசின் தரவு தளத்தின் உள்ள தகவலின்படி (VAHAN), மொத்த வாகனங்களில் 5,44,643 மின்சார இரு சக்கர வாகனங்கள். 54,252க்கும் அதிகமானவை மின்சார நான்கு சக்கர வாகனங்கள்.
சிஎன்ஜி, எத்தனால், எரிபொருள் செல் ஹைட்ரஜன், எல்என்ஜி, எல்பிஜி, சோலார், மெத்தனால் போன்ற எரிபொருள் வகைகளைக் கொண்ட 2,95,245 இரு சக்கர வாகனங்களும், 18,47,539 நான்கு சக்கர மற்றும் அதற்கு மேற்பட்ட வகை வாகனங்களும் இருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர், "சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்தான் (MoRTH) தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்கு முதன்மைப் பொறுப்பாகும். தேசிய நெடுஞ்சாலைகள் பொதுவாக போக்குவரத்துக்கு தகுதியான நிலையில் பராமரிக்கப்படுகின்றன.
மழைக் காலங்களில், வெள்ளம், நிலச்சரிவு, கனமழை போன்றவற்றால் சில இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் சில நேரங்களில் சேதம் ஏற்படுகிறது. ஆனால், சீரமைப்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும். தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதும் புதுப்பிப்பதும் தொடர்ச்சியான செயல் ஆகும்.
போக்குவரத்து தேவையின் அடிப்படையில், விரைவுச் சாலைகளின் கட்டுமானம், தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திறனை மேம்படுத்துதல், தற்போதுள்ள நடைபாதைகளின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு, ஏற்கனவே உள்ள பாலங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு மற்றும் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களை கட்டுதல் போன்ற திட்டங்களை அமைச்சகம் எடுத்து வருகிறது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்