UNESCO: ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம், சஹ்ரதயலோக-லோகனா ஆகிய புத்தகங்களுக்கான புதிய அங்கீகாரம் வழங்குவதற்கான முடிவு, ஆசியா மற்றும் பசிபிக் உலகக் குழுவின் 10வது பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.


இந்திய புத்தகங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்:


ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம் மற்றும் சஹ்ரதயலோக-லோகனா ஆகிய, பண்டைய இந்திய வரலாறு தொடர்பான புத்தகங்கள், யுனெஸ்கோவின் ”உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டின் நினைவகத்தில்” சேர்க்கப்பட்டுள்ளன. மங்கோலியா தலைநகர் உலான்பாதரில் மே 7-8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசியா மற்றும் பசிபிக் உலகக் குழு (MOWCAP) நினைவகத்தின், 10வது பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


காலத்தை கடந்த படைப்புகள்:


சஹ்ருதயலோக-லோசனா, பஞ்சதந்திரம் மற்றும் ராம்சரித்மனாஸ் ஆகிய புத்தகங்கள் முறையே,  ஆச்சார்யா ஆனந்தவர்தன், பண்டிட் விஷ்ணு சர்மா மற்றும் கோஸ்வாமி துளசிதாஸ் ஆகியோரால் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட புத்தகங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில், ”இவை இந்திய இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை ஆழமாக பாதித்த காலத்தை கடந்த படைப்புகள். நாட்டின் தார்மீக கட்டமைப்பு மற்றும் கலை வெளிப்பாடுகளை வடிவமைக்கின்றன. இந்த இலக்கியப் படைப்புகள் நேரத்தையும் இடத்தையும் கடந்து, இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் வாசகர்கள் மற்றும் கலைஞர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


கடும் விவாதங்களுக்கு பிறகான அங்கீகாரம்:


இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் (IGNCA) கலா நிதி பிரிவின் டீன் (நிர்வாகம்) மற்றும் துறைத் தலைவர் பேராசிரியர் ரமேஷ் சந்திர கவுர், இந்தியா சார்பில் சஹ்ருதயலோக-லோசனா, பஞ்சதந்திரம் மற்றும் ராம்சரித்மனாஸ் ஆகிய புத்தகங்களையும் உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் இணைக்க வேண்டும் என பரிந்துரை செய்தார். தொடர்ந்து, 10வது பொதுக்கூட்டத்தில் புத்தகங்களின் சிறப்பம்சங்களையும் எடுத்துரைத்தார். பிரதிநிதிகளின் கடுமையான விவாதங்கள் மற்றும் வாக்களிப்பைத் தொடர்ந்து, அந்த புத்தகங்கள் சர்வதேச அங்கீகார பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளன.


MOWCAP பொதுக்கூட்டம்:


MOWCAP இன் 10வது பொதுக் கூட்டம், மங்கோலியாவின் கலாச்சார அமைச்சகம், யுனெஸ்கோவுக்கான மங்கோலியன் தேசிய ஆணையம் மற்றும் பாங்காக்கில் உள்ள யுனெஸ்கோ பிராந்திய அலுவலகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, MOWCAP பிராந்தியப் பதிவு "மனித ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் கற்பனை" ஆகிய கருத்துகளை கொண்டாடும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.


யுனெஸ்கோ உலகப் பதிவேட்டின் நினைவகம் என்றால் என்ன?


UNESCO Memory of the World Register 1992 இல் UNESCO ஆல் தொடங்கப்பட்ட சர்வதேச முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும். இது மனிதகுலத்தின் ஆவணப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பிடத்தக்க வரலாற்று, கலாச்சார மற்றும் அறிவியல் மதிப்புள்ள ஆவணப் பொருட்களைப் பாதுகாத்து, அணுகுவதை உறுதி செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இதில் தனித்தன்மை வாய்ந்த மற்றும் ஈடுசெய்ய முடியாத கையெழுத்துப் பிரதிகள், அச்சிடப்பட்ட புத்தகங்கள், காப்பக ஆவணங்கள், திரைப்படங்கள், ஆடியோ மற்றும் புகைப்படப் பதிவுகள் ஆகியவை அடங்கும். யுனெஸ்கோ இணையதளத்தின்படி, மே 2023 நிலவரப்படி 494 கல்வெட்டுகள் இந்த அமைப்பால் பாதுகாக்கப்படுகிறது.