லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில், பேருந்து தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து நேற்று இரவு ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் 42 பேர் பயணம் செய்தனர்.
பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் இன்று அதிகாலை சென்றுக்கொண்டிருந்த போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது.
அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனால் பேருந்து ஓட்டுனர் உட்பட் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
40 பயணிகளுடன் தனியார் பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ள பல்நாடு மாவட்டம், பசுமர்ரு கிராமத்திற்கு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திர மாநில ஆளுநர் எஸ். அப்துல் நசீர் ஆழ்ந்த இரங்கலும் வேதனையும் தெரிவித்துள்ளார்.