அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் ராமர் கோயில் திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், பிரதமர் மோடியை இன்று சந்தித்து திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


"வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு"


அதில், "இன்று உணர்வுப்பூர்வமான நாள். சமீபத்தில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அயோத்திக்கு வருமாறு அவர்கள் என்னை அழைத்துள்ளனர்.
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என் வாழ்நாளில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நான் காண்பது எனது அதிர்ஷ்டம்" என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.






ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமி தினத்தை முன்னிட்டு நேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 
ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் கோயில்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.


உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:


கடந்த 2019ஆம் ஆண்டு, அயோத்தி வழக்கில் ராமர் கோயிலை கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிட, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை பிரதமர் நரேந்திர மோடி அமைத்தார். அதே ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி பூமி பூஜை செய்தார். 


ராமர் மற்றும் சீதாவின் சிலைகளை செய்ய ஷாலிகிராம் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கற்கள் நேபாளத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த கற்கள், 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது. நேபாளத்தின் காளி கண்டகி நதியிலிருந்து இந்த கற்கள் எடுக்கப்பட்டுள்ளது.


ராமர் சிலையின் உயரம் 5 முதல் 5.5 அடி வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் ராமர் சிலையில் உயரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இதையும் படிக்க: Modi On Casteism: சாதி, பிராந்திய அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிப்பவர்களை தூக்கி எறிய வேண்டும் - பிரதமர் மோடி