பாலஸ்தீன காசா பகுதியில் ஆட்சி புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுப்பதாகக் கூறி, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.


குறிப்பாக, காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்த 19 நாள்களாக நடந்து வரும் போரில் 2,300 குழந்தைகள் 1,100 பெண்கள் உள்பட 5,700 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும், இஸ்ரேல் அதை மறுத்து வருகிறது. 


ஐநாவில் இஸ்ரேல் போர் தொடர்பான விவாதம்:


இப்படிப்பட்ட சூழலில், இஸ்ரேல் மற்றும் காசாவில் நிலவி வரும் சூழல் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம், காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பினார். இதை தொடர்ந்து, பாகிஸ்தான் தூதருக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி ஆர். ரவீந்திரா பேசினார்.


காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பி இருப்பது தேவையற்ற விஷயம் என்றும் அதற்கு பதில் அளித்து அதை கவுரவப்படுத்த விரும்பவில்லை என்றும் ரவீந்திரா விமர்சித்தார். விரிவாக பேசிய அவர், "எனது உரையை முடிப்பதற்கு முன், எனது நாட்டின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதியை பற்றி உறுப்பினர் ஒருவர் பேசுவது வழக்கமாகிவிட்டது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்.


காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்:


பாகிஸ்தான், இந்திய தூதர்கள் பேசுவதற்கு முன்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். "எந்தவொரு தேசமும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும், அத்தகைய பயங்கரம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் உள்ள உரிமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். 


இந்த சபையின் எந்த உறுப்பினரும், இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் எந்த தேசமும் அதன் மக்களை படுகொலை செய்வதை பொறுத்துக்கொள்ள கூடாது. பொறுத்துக்கொள்ளவும் ​​முடியாது. இந்த கவுன்சிலும் ஐ.நா பொதுச் சபையும் பலமுறை உறுதி செய்துள்ளது. 


அனைத்து பயங்கரவாதச் செயல்களும் சட்டத்திற்குப் புறம்பானது. நியாயப்படுத்த முடியாதவை. நைரோபியை தாக்கினாலும் சரி பாலியை தாக்கினாலும் சரி இஸ்தான்புலை தாக்கினாலும் சரி மும்பையை தாக்கினாலும் சரி நியூயார்க் அல்லது கிப்புட்ஸ் பீரியில் உள்ளவர்களை குறிவைத்தாலும், அவை சட்டவிரோதமானவை. நியாயப்படுத்த முடியாதவை. 


ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்கி இருந்தாலும் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு தாக்கியிருந்தாலும் சரி அல் ஷபாப் அமைப்பு தாக்கி இருந்தாலும் சரி லஷ்கர்-இ-தொய்பா அல்லது ஹமாஸ் தாக்கியிருந்தாலும் சரி அவை சட்டவிரோதமானவை. நியாயப்படுத்த முடியாதவை" என்றார்.