Modi On Casteism: டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற நவராத்திரி விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பிரதமர் மோடி பேச்சு:
விஜயதசமியையொட்டி டெல்லியில் உள்ள டிடிஏ மைதானத்தில் துவாரகா ஸ்ரீ ராம் லீலா சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அம்பை எய்தி தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ராவணன், மேகநாதன் மற்றும் கும்பகரனின் உருவ பொம்மைகளை எரித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "விஜயதசமி அன்று சாஸ்திர பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இந்திய மண்ணில், ஆயுதங்கள் வழிபடப்படுவது எந்த நிலத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல. தனது சொந்த நிலத்தை பாதுகாக்கவே வழிபடுகிறோம். நமது சக்தி பூஜை நமக்காக மட்டுமல்ல, உலகத்தின் நலனுக்கானதும் தான்" என்றார்.
சமூக நல்லிணக்கம் அவசியம் - மோடி
தொடர்ந்து, “ராவணன் தஹன் என்பது ராவணனின் உருவபொம்மையை எரிப்பதாக மட்டுமின்றி, சமூகத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தீமைகளையும் எரிக்க வேண்டும். சமூகத்தில் நிலவும் தீமைகளையும் பாகுபாட்டையும் மக்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தீய சக்தியையும் எரிக்க வேண்டும். குறிப்பாக சாதி மற்றும் பிராந்தியவாதத்தின் அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்தும் சக்திகளை வீழ்த்த வேண்டும். ராமரின் சிந்தனைகள் கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். சுயசார்பு கொண்ட வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற சம உரிமை உள்ள மற்றும் செழிப்பையும் திருப்தியையும் உணர்வதை உள்ளடக்கிய, உலக அமைதிக்கான செய்தியை வழங்கும் ஒரு வளர்ந்த இந்தியா உருவாக வேண்டும்” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அரசியல் பின்னணி:
மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. அதோடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தான், சாதி மற்றும் பிராந்தியாவாத அடிப்படையில் பிளவு ஏற்படுத்துவபவர்களை தூக்கி எறிய வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.