கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம் என்றும் இந்த நாளின் மகிழ்வை வெளிப்படுத்த, வார்த்தைகளே இல்லை எனவும் ஆளுநர் தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கும் பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 


இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பல்வேறு தரப்பினர் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 


இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பாக நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை, கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம் என்றும் இந்த நாளின் மகிழ்வை வெளிப்படுத்த, வார்த்தைகளே இல்லை எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ’’ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வைக் கண்டுகளிக்கிறது. கொண்டாடுகிறது. எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. 


சிறந்த அரசாங்கம் என்பது ராம ராஜ்ஜியம்தான். தமிழில் கிராம ராஜ்ஜியத்தை சிறந்த ராஜ்ஜியமாகச் சொல்வார்கள். கிராம அளவில், நிர்வாகம் செய்யப்படுவதுதான் கிராம ராஜ்ஜியம். அதுவே ராம ராஜ்ஜியம்.






கடவுள் ராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முக்கியமான தருணம். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்களின் மகிழ்வை வெளிப்படுத்த, சொற்களே இல்லை’’ என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.