நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 


இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 


இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பாக நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக உள்ள, நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ பெரும் மதிப்பிற்குரிய பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகள். உங்களது ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட மற்றொரு சாதனை.  ஜெய் ஸ்ரீராம். தற்போது திறக்கப்பட்டுள்ள ராமர் கோவில் பல ஆண்டுகள் கடந்தும் தலைமுறைகள் கடந்தும் நினைவு கூறப்படும். இந்த கோவில் அமைய தங்களது வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்தவர்களுக்கு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது சிறப்பான தருணமாக அமையும். உங்களுக்கு சல்யூட். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” இவ்வாறு நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஷாலின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. 




 


அதேநேரத்தில் ராமர் கோவில் திறப்பு தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதும் கவனம் பெற்றுள்ளது. ”ராமர் கோயில் திறப்பு இன்று நடக்கிறது, ஆனால் அதன் பின்னாடி நடக்கும் மத அரசியல நாம கவனிக்க வேண்டி இருக்கு. அதற்கு இருக்கும் ஆதரவு, எதிர்ப்பு மீறி இதுமாதிரி ஒரு விஷயம் நடக்கக்கூடாதுனு நினைக்கறதே இன்னைக்கு பெரிய பிரச்னையா மாறிட்டு இருக்குங்கறத நான் பாக்கறேன். சிக்கலான ஒரு சூழல் இருக்கு.


பராசக்தி பட டயலாக்கின்படி “கோயில் கூடாது என்பது இல்ல, கோயில் கொடியவர்களின் கூடாராமா மாறிடக்கூடாதுங்கறது” என்பது தான் நம்முடைய கவலை. கடவுள் நம்பிக்கை என்பதைதாண்டி, இது அரசியலாக்கப்படுவது தான் சிக்கல்.


ரஜினிகாந்த் (Rajinikanth) அயோத்திக்கு போனது அவரோட விருப்பம். இதுமாதிரி விஷயங்களில் அவரோட கருத்தை ஏற்கெனவே சொல்லி இருக்காரு. 500 ஆண்டு பிரச்னை தீர்ந்திருக்குனு சொல்றாரு. ஆனா இதுக்கு பின்னாடி இருக்கும் அரசியல் பற்றி நாம கேள்வி கேக்க வேண்டி இருக்கு. அவர் பேசியது தப்பு, சரி என்பதைத் தாண்டி எனக்கு அதில் விமர்சனங்கள் இருக்கு” எனப் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.