குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட சர்ச்சைப் பதிவு இணையவாசிகளை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்திய நிலையில் அவர் பின்வாங்கியுள்ளார். 






இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 29 ஆம் தேதியாகும். 






இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 






அவர் தனது ட்விட்டர் பதிவில், திரௌபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் யார்? மேலும் முக்கியமாக, கவுரவர்கள் யார்? என தெரிவிக்க பலரும் கொந்தளித்து அவரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த கருத்து  யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக சொல்லப்படவில்லை என ராம் கோபால் வர்மா விளக்கமளித்தார். 






இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் மரியாதைக்குரிய திரௌபதி குடியரசுத் தலைவராக இருப்பது  பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் போரை மறந்து ஒன்றாக இணைவார்கள். மகாபாரதம் புதிய இந்தியாவிலும், பாஜகவிலும் மீண்டும் எழுதப்படும்  என தெரிவித்துள்ளார். மேலும் அவர் எப்போதும் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண