சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் 110 மணி நேரம் சிக்கிய சிறுவன் ராகுல் சாஹூ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினான். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜஞ்ஜிர் சம்பா மாவட்டம் உள்ளது. இங்கு உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் 11 வயது சிறுவன் ராகுல் சாஹூ தவறி விழுந்தான். அந்த கிணற்றின் ஆழம் 60 அடி. அதன் பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஜூன் 10 ஆம் தேதி கிணற்றில் விழுந்த சாஹூ என்ற அந்தச் சிறுவன் 110 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டான். ஜூன் 14 அன்று சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
மீட்புப் பணியில் 500 பேர்:
சிறுவனை மீட்கும் பணியில் 500 பேர் ஈடுபடுத்தப்படனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் திரண்டு மீட்புப் பணியில் இடம்பெற்றிருந்தனர். உள்ளூர் போலீஸாரும் உதவியாக இருந்தனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சாஹூ பிலாஸ்பூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை ஜன்ஜ்கிர் சம்பா ஆட்சியர் ஜிதேந்திர குமார் சுக்லா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களிடம் நேரடியாக சாஹூவின் உடல்நிலை, மனநிலை குறித்து விசாரித்தார். மருத்துவர் சாஹூ தேறிவிட்டதாகக் கூறிய நிலையில் அவனை அவனது சொந்த ஊரான பிர்ஹிதுக்கு அனுப்பிவிவைத்தார். ராகுல் சாஹூவின் உடல் நிலையை இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்து கவனிக்கும்படி ஆட்சியர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்திச் சென்றார். இதனை சத்தீஸ்கர் அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
கண்ணீர் மல்க நன்றி:
ராகுல் சாஹூவின் தந்தை ராம்குமார் சாஹூ கூறுகையில், என் மகனை பத்திரமாக மீட்டுக் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். முதல்வர் பூபேஷ் பாகெல் என் மகன் மீட்கப்படும் வரை அவ்வப்போது என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். எனக்கு எல்லாவித உதவிகளையும் செய்தார். முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறை, தீயணைப்புத் துறையினருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ராகுல் சாஹூ மீட்கப்பட்ட பின்னர் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ராகுல் மீட்கப்பட்டது தொடர்பாக ஓர் ஆவணப்படம் எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோல் ராகுலின் கல்விச் செலவையும், மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் என்று அறிவித்தார். 110 மணி நேரம் மீட்புக் குழுவினருக்கு துணிவுடன் ஒத்துழைத்த சிறுவன் ராகுல் சாஹூவை முதல்வர் வெகுவாகப் பாராட்டினார்.
சிறுவன் ராகுல் சாஹூவை அவனது சொந்த கிராம மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.