விநாயகர் சிலை :


இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு வருகிற நாளை (ஆகஸ்ட் 31) ஆம் தேதி தொடங்கி,செப்டம்பர் 9-ஆம் தேதி வரையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வழிப்பாட்டிற்கான விநாயகர் சிலை விற்பனை சென்னை போன்ற பெரு நகரங்கள் தொடங்கி , கிராமங்கள் வரையிலும் களைக்கட்டி வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் சிலை வடிவமைப்பாளர்கள் வித்தியாசமான முறையில் சிலைகளை வடிவமைத்து , பக்தர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் ராஜமௌளி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். 




ராம்சரண் , ஜூனியர் என்.டி.ஆர் மாதிரியில் விநாயகர் :


ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம்சரண் நடித்த ராம் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்ட விநாகர்களை அதிகமாக பார்க்க முடிகிறது. அந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் ராம்சரண் வில் , அம்பை ஏந்தி மாஸாக வலம் வந்திருப்பார். அந்த மாதிரியை வைத்துதான் நீங்கள் புகைப்படத்தில் பார்க்கும் விநாயகரை உருவாக்கியிருக்கின்றனர். அதே போல ஜூனியர் என்.டி.ஆர் புலியுடன் சண்டையிடும் காட்சியின் மாதிரியை வைத்தும் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார்கள்.டெல்லியை சேர்ந்த சிற்பியான சீதா, அவரும் அவரது குழுவினர் சேர்ந்து கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற 50 சிலைகளைச் செய்திருக்கின்றனர், விற்பனைக்கு வைக்கப்பட்ட ஒரு சில நாட்களில் அத்தனை சிலைகளும் விற்று தீர்ந்துவிட்டதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஒரு சிலையின் விலை எவ்வளவு என கேட்டதற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு நிர்ணயித்ததாக கூறுகின்றனர்.






பாகுபலி விநாயகர் :


கடந்த ஆண்டு பாகுபலி திரைப்படத்தில் சிவன் சிலையை தூக்கி வரும் பிரபாஸின் மாதிரியை வைத்து நிறைய விநாயகர் சிலையை உருவாக்கியிருந்தார்கள். அதுவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டும்  தோளில் சிவ லிங்கத்தை தூக்கி சுமந்தபடி வரும் விநாயகர் சிலையை வடிமைத்திருக்கிறார்கள்.


 




விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில்  கரைப்பது வழக்கம் . ஊர்வலமாக எடுத்துச்செல்லும் பொழுது , பக்தியையும் தாண்டி விநாயகரின் அலங்காரத்தை பார்க்கவே பாதி மக்கள் குவிந்திருப்பார்கள் . அப்படியானவர்களை கவரும் பொருட்டுதான் சினிமா கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்ட சிலைகள் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.