ரக்‌ஷா பந்தன் நாளை ஒட்டி ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் ட்விட்டரில் தங்களின் பல்வேறு புகைப்படங்களை பதிவேற்றி அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.


காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ட்விட்டரிலேயே தங்களின் அன்பைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.






ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானும் எனது சகோதரி பிரியங்கா காந்தியும் சிறுவயது முதலே இணைந்திருக்கிறோம். வாழ்வில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை ஒன்றாகவே சந்தித்துள்ளோம். ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் துணிச்சலையும், வலிமையையும் பகிர்ந்து கொண்டோம். 






அதேபோல் ட்விட்டரிலும் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்களில் அவர்களின் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி படங்களும் இருந்தன.


 


பிரியங்கா காந்தியும் ட்விட்டரில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ராகுல் காந்தியுடன், கணவர் ராபர்ட் வத்ராவுடன் எடுத்த புகைப்படங்கள் என பல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.






கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் விமான நிலையத்தில் பரபரப்பான தருணங்களுக்கு இடையே இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்ட வீடியோ வைரலானது.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ரக்‌ஷா பந்தன் நாளை ஒட்டி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ரக்‌ஷா பந்தன் சகோதர, சகோதரிகளுக்கு இடையே உடையாத பந்தத்தை பறைசாற்றுகிறது. இந்த நாள் பரஸ்பரம் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் நாள் என்றார். இந்த நன்னாளில் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.