ரக்ஷா பந்தன் சிறப்பு சலுகையாக பெண்களுக்கான இலவச பேருந்து பயண வசதி ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 12 மணி வரை நீடிக்கும் என ஹரியான அரசு தெரிவித்துள்ளது.
சகோதரத்துவத்தை அனுசரிக்கும் ரக்ஷா பந்தன் நிகழ்வு வடமாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவை ஒட்டி அதனை சிறப்பிக்கும் வகையில், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை அன்று ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதியை அறிவித்துள்ளது. பெண்களுக்கான இந்த இலவச பேருந்து பயண வசதி ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 12 மணி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“பெண்களுக்கு ரக்ஷா பந்தன் பரிசாக வழங்க, ஹரியானா அரசு இந்த ஆண்டும் ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் இலவச பயண வசதியை வழங்க முடிவு செய்துள்ளது. 2022 ஆகஸ்ட் 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இலவச பயண வசதி தொடங்கும்” என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு இந்த இலவச பயண வசதி மாநிலம் முழுவதும் அனுமதிக்கப்படும், அதே போல் ஹரியானாவில் எந்த இடத்திலிருந்தும் டெல்லி மற்றும் சண்டிகர் வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.
உடன்பிறப்புகளுக்கிடையேயான அன்பு, அக்கறை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கிய நிரந்தரமான பிணைப்பைக் கொண்டாடுவதற்கு ரக்க்ஷா பந்தன் ஒரு நல்ல சந்தர்ப்பமாக கருதப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டி, தங்கள் பிணைப்பைக் குறிக்கும் வகையில் பரிசுகள் மற்றும் இனிப்புகளை பரிமாறிக் கொள்ளும் இந்த நிகழ்வு இந்தியாவில் வடமாநிலங்களில் பெரிதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக வகை வகையான ராக்கிக்கள் ஏற்கெனவே சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழா ஆகஸ்ட் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.