ஓபிசி பிரிவினருக்கான பட்டியலை  மாநில அரசுகளே தயாரித்துக்கொள்ள அனுமதி வழங்கும் 127 சட்டத்திருத்த மசோதா மாநிலங்களையில் இன்று நிறைவேறியது. 


மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ரத்து செய்தது. அரசியல் சாசன திருத்தப் பிரிவுகளை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்க அதிகாரம் இல்லை என கூறியது. இந்த பட்டியலைப் பராமரிக்கும் மாநிலங்களுக்கான அதிகாரத்தைத் திரும்ப பெற, அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. 


பெகசஸ் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உக்கிரமான  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்காரணமாக, இருஅவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று ஓபிசி பிரிவினருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கும் மசோதா தொடர்பான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. இதில், அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டன. 


இந்த மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்த பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரப்பதாக தெரிவித்தார். இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார். 


விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, " இந்திய அரசியலமைப்பில் இடஒதுக்கீட்டு முறைக்கும் வரம்பை நிர்ணயிக்கவில்லை. எனவே, இடஒதுக்கீட்டு வரம்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு, மசோதாவுக்கு ஆதரவாக 385 உறுப்பினர்கள் மக்களவையில் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிராக எவரும் வாக்களிக்கவில்லை. 


மாநிலங்களவையில் தாக்கல்:  மாநிலங்களவையில் இன்று இந்த மசோதா விவாதத்திற்கு வந்தது.  மசோதாவுக்கு ஆதரவாக 187 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிராக எவரும் வாக்களிக்கவில்லை. 


 






இதுகுறித்து திமுக எம்.பி வில்சன் தனது ட்விட்டர் பதிவில், " 2021 வருட 127வது அரசியலமைப்பு சட்டத்திருத்த  மசோதா நிறைவேற்றப்பட்டதில் ஒரு பகுதியாக இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்கும் அதிகாரத்தை இந்த மசோதா வழங்குகிறது. 50% வரம்பை அகற்றுவதற்காக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தை அமைச்சர்கள் எதிர்த்தனர்" என்று தெரிவித்தார்.  


மேலும், வாசிக்க: 


Tamil Nadu Reservation Act: தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா? விரிவான தரவுகளுடன் ABP நாடு ஸ்பெஷல்


Census 2021 : 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி தகவல்கள் சேகரிக்கப்படாது - மத்திய அரச


OBC பிரிவினருக்கு சாதிச்சான்று : ஊதியம், வேளாண் வருவாயை கணக்கில்கொள்ள வேண்டாம் - தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை