பிரபல மலையாள நடிகர் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல் வழக்கில் சாட்சி சொல்ல நடிகர் காவ்யா மாதவன் ஆஜர் ஆகாததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 2017ல் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பிரபல மலையாள நடிகரை வழிமறித்த கும்பல் அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றது. இதனை செல்போன் கேமிராவில் படம் பிடித்தக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட நடிகரை அந்த காமிரா ஆவணம் கொண்டு தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில் எட்டாவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவராக பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் புல்சர் சுனில் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து இரண்டே மாதங்களில் திலீப் ஜாமீனில் வெளியேறினார். தற்போது இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் கூட்டமைப்பின் மேடை நிகழ்வுக்கான ரிகர்சலின்போது ஹோட்டலில் நடிகர் திலீப்புக்கும் பாதிக்கப்பட்ட நடிகருக்குமிடையே தீவிர வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே நடிகர் திலீப் பழிவாங்கல் நடவடிக்கையாக இதைச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடிகர் திலீப் கைதும் செய்யப்பட்டார். வழக்கை விசாரிக்கும் அரசுத் தரப்பு இதில் திலீப் மனைவியும் நடிகருமான காவ்யா மாதவனை இந்த வாக்குவாதத்தை நேரில் கண்ட சாட்சியாக இணைத்துள்ளது. திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியரும் இந்த வழக்கில் சாட்சியமாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.


ஆனால் வழக்கில் 34வது சாட்சியாக இணைக்கப்பட்டுள்ள காவ்யா மாதவன் தற்போது பிறழ் சாட்சியாக (Hostile witness)மாறியதாக அரசு தரப்பு அறிவித்துள்ளது. பிறழ் சாட்சியாக மாறிய நிலையில் அரசு தரப்பு அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. 


நடிகர் திலீப் மீதான இந்த பாலியல் வன்முறை வழக்கை விரைந்து முடிக்க சொல்லி உச்சநீதிமன்றமும் கேரள உயர்நீதிமன்றமும் தேதி அறிவித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக விசாரணை நீதிமன்றம் தேதியை நீட்டித்துக் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் காவ்யா மாதவன் பிறழ் சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 


வழக்கு விசாரணை வருகின்ற செவ்வாய் அன்று மீண்டும் தொடரவிருக்கிறது. 


முன்னதாக, திலீப் மீதான இந்தக் குற்றச்சாட்டை அடுத்து பார்வதி, ரிமா கலிங்கல் உள்ளிட்ட சில கேரள நடிகர்கள் அவருக்கு எதிராக வலுத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





பார்வதி மலையாளத் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். கூட்டமைப்பு திலீப்புக்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.