நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தொடர் அமளி, குழப்பம் மற்றும் கோஷங்களின் சத்தம் காரணமாக தூக்கமற்ற இரவுகளை கடந்து சென்றதாக மாநிலங்களைத் தலைவர் வெங்கையா நாய்டு இன்று உருக்கமாக பேசினார். சில எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் மாண்புகளை அளித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. பெகசஸ் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் உக்கிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, இருஅவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன
மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து விவாதிப்பதற்காக பேரவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டுவரவும் முயற்சித்தனர். விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பெகசஸ் விவாகரம் தொடர்பான விவாதத்தை மத்திய அரசு புறக்கணித்து வந்தது.
இந்நிலையில், இன்று மாநிலங்களையில் பேசிய அவைத் தலைவர் வெங்கையா நாய்டு, " கோயிலின் கருவறைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோன்று, ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மையை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆனால், இந்த புனிதத் தனிமையை நேற்று எதிர்க்கட்சிகள் சீரழித்து விட்டனர். சில எம்பி-க்கள் மேஜை மீது ஏறி கோஷமிட்டனர். சிலர் அவையின் மையப்பகுதிக்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தினர். இதுபோன்ற நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு மேல் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் இடையூறு காரணமாக கேள்வி நேரம் வீணாகிறது. விவாதம், ஆலோசனை, தீர்மானம் ஆகியவற்றால்தான் ஜனநாயக கோயில்களின் கண்ணியம், புனிதத்தன்மை, கவுரவத்தை காக்க முடியும். எதிர்க்க வேண்டுமே என்பதற்காக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்ப்பது எதிர்கட்சிகளின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்று தெரிவித்தார். கடின உழைப்புக்கும் போராட்டத்திற்கும் பிறகு மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கான வந்துள்ள ஆனால் பேசுவதற்கான போதிய வாய்ப்பு அளிக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளுக்கும் இது அதிக அளவு பாதிப்பை அளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாட்களே உள்ள நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்தார்.
நான்கு ஆண்டுகள் நிறைவு:
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான திரு எம்.வெங்கையா நாயுடு பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் அவரது செயல்பாடுகள் குறித்த ஒரு பார்வையை எடுத்துரைக்கும் வகையில் ஓர் மின்னணு புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ளது. இவரது தலைமையின் கீழ், மாநிலங்களவையின் செயல்திறன், 2017-18-ஆம் ஆண்டின் 48.17%லிருந்து 2020-21 இல் (2021 பட்ஜெட் கூட்டத்தொடர் வரை) 95.82% ஆக அதிகரித்தது. கடந்த 4 ஆண்டுகளிலேயே மிக அதிகமாக 2020-21-ஆம் ஆண்டில் 44 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
வெங்கையா நாயுடுவின் தலைமையின் கீழ், மாநிலங்களவையின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஆர்எஸ்டிவி-யின் (RSTV) வலையொளி சந்தாதாரர்கள் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 5 லட்சம் முதல் 59 லட்சமாக புதிய உச்சத்தை எட்டியது. மேலும், மாநிலங்களவை தலைவரால் உருவாக்கப்பட்ட குழுவின் முயற்சியால் எல்எஸ்டிவி (LSTV) மற்றும் ஆர்எஸ்டிவியை இணைத்து சன்சாத் டிவி என்ற புதிய தொலைக்காட்சி உருவாக்கப்பட்டு வருகிறது என்று குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.