கச்சத்தீவு விவகாரம் தற்போது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் போது மீன்வர்கள் கைது செய்யப்படவில்லையா என மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 


இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான விளக்கத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை கொடுத்திருந்தார். 






அதற்கு பதில் கொடுக்கும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ கடந்த 50 ஆண்டுகளில் மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது உண்மைதான். அதேபோன்று பல இலங்கை மீனவர்களை இந்தியா கைது செய்துள்ளது.  ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது மீனவர்களை விடுவித்துள்ளது. ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தபோதும், வெளியுறவுச் செயலராக இருந்தபோதும், வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் இது நடந்துள்ளது.  


ஜெய்சங்கர் காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் எதிராகப் பேசுவதற்கு என்ன மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படவில்லையா? 2014 ஆம் ஆண்டிலிருந்து மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படவில்லையா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.