நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களைவைக்கு புதியதாக 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தல் ஜுலை 24ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்:


எம்.ஏல்.ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு கட்சி சார்பில் இருந்தும், மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் பதவிக்காலம் முடிய உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்தை பூர்த்தி செய்வதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தல் விவரம்:


தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியை பூர்த்தி செய்வதற்கான தேர்தல் ஜுலை 24ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக ஜுலை 13ம் தேதியும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியாக ஜுலை 17ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 10 மாநிலங்களவை உறுப்பினர்களும் குஜராத், கோவா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.


ஜெய்சங்கரின் பதவிக்காலம் நிறைவு:


பதவிக்காலம் முடிவடைய உள்ளவர்களில் பாஜகவை சேர்ந்த வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கரும் ஒருவராவார். குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களான ஜெய்சங்கர், தினேஷ்சந்திரா ஜெமல்பாய் அனவாடியா, லோகந்த்வாலா ஜுகல்சிங் மாதுர்ஜி ஆகியோரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவர்களோடு பாஜக சார்பில் கோவாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, வினய் டி. டெண்டுல்கரின் பதவிக்காலமும் ஜூலை 28-ம் தேதியுடன் முடிவடைகிறது.


மேற்குவங்க எம்.பிக்கள்:


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களான டெரெக் ஓ பிரையன், டோலா சென், சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி மற்றும் சுகேந்து சேகர் ரே ஆகியோரின் பதவிக்காலமும், அதே போல் காங்கிரஸ் எம்பி பிரதீப் பட்டாச்சார்யாவின் பதவிக்காலமும் ஆகஸ்ட் 18ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், காலியாகும் 10 இடங்களுக்கு தான், ஜுலை 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


தேர்தல் அட்டவணை:



  1. அறிவிப்பு வெளியீடு: ஜூலை 6

  2. வேட்புமனு தாக்கல் கடைசி தேதி: ஜூலை 13

  3. வேட்புமனுக்கள் பரிசீலனை: ஜூலை 14

  4. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி: ஜூலை 17

  5. தேர்தல் தேதி: ஜூலை 24

  6. வாக்களிக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

  7. வாக்கு எண்ணிக்கை: ஜூலை 24 மாலை 5 மணிக்கு


 இடைதேர்தல் அறிவிப்பு:


இதனிடையே, ஏப்ரல் 11 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி லூயிசின்ஹோ ஜோகிம் ஃபலேரோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியான, மேற்கு வங்கத்தில் காலியான நாடாளுமன்ற தொகுதிக்கும் ஜுலை 24ம் தேதியே இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.