டெல்லியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தினாலும், முறையற்ற வடிகால் நிலைமையினாலும் மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதிர்வலைகளை ஏற்படுத்திய டெல்லி சம்பவம்: சட்டத்திற்கு புறம்பாக கட்டடத்தின் அடித்தளத்தில் தனியார் பயிற்சி மையம், நூலகத்தை இயங்கி வந்ததாக டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.
பயிற்சி என்பது வணிகமாகிவிட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் வேதனையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், "விதி எண் 267இன் கீழ் எனக்கு நோட்டீஸ்கள் வந்துள்ளன.
டெல்லிக்கு UPSC கனவுடன் வந்த மாணவர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் துயர மரணம் அடைந்தது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். நம் நாட்டு இளைஞர்களின் திறமையை வளர்க்க வேண்டும் என கருதுகிறேன்.
அரசின் அலட்சியம் காரணமா? பயிற்சி என்பது வணிகமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் நாம் ஒரு செய்தித்தாளைப் படிக்கும்போது, முன்பக்கத்தில் அவர்களின் விளம்பரங்கள்தான் இருக்கின்றன" என்றார். இதை தொடர்ந்து, மக்களவையில் இதுகுறித்து பேசிய பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜ், "ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு தயாராவதற்காக அந்த மாணவர்கள் டெல்லியில் தங்கியிருந்தனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக டெல்லி அரசாங்கத்தின் அலட்சியத்தால், அந்த மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை சொல்லி கொள்கிறேன். இந்த மூன்று மாணவர்களின் மரணத்துக்குக் காரணம், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் முழுக்க முழுக்க அக்கறையின்மைதான்.
கடந்த 2 ஆண்டுகளாக, டெல்லி மாநகராட்சி, ஆம் ஆத்மியின் கீழ் உள்ளது. டெல்லி ஜல் போர்டும் அவர்களின் கீழ் உள்ளது. பழைய ராஜீந்தர் நகர் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து உள்ளூர் எம்.எல்.ஏ., கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எம்.எல்.ஏ தொடர்ந்து நையாண்டி செய்து வந்துள்ளார்.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.