Prashant Kishor: பிரசாந்த் கிஷோர் தனது தலைமையிலான ஜன் சுராஜ் அமைப்பை, வரும் அக்டோபர் 2ம் தேதி அரசியல் கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு:


பீகாரில் பரப்புரையை தொடங்கிய பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் எனும் அமைப்பு, அக்டோபர் 2 ஆம் தேதி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அமைப்பதற்கு முன்னதாக, பீகார் முழுவதும் பரப்புரையுடன் தொடர்புடைய 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளின், எட்டு தனி மாநில அளவிலான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று ஜன் சுராஜ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்தக் கூட்டங்களில், கட்சியை உருவாக்கும் செயல்முறை, அதன் தலைமை, அரசியலமைப்பு மற்றும் கட்சியின் முன்னுரிமைகள் குறித்து அனைத்து அதிகாரிகளுடன் முடிவு செய்யப்படும்,” எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் செய்தியாளரை சந்தித்தபோது, அக்டோபர் 2 ஆம் தேதி ஜன் சுராஜ் முழு கட்சியாக மாறும் போது சுமார் ஒரு கோடி பேர் அதில் சேருவார்கள் என்று, அதன் தலைவரும்,, தேர்தல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தார்.


5 குழுக்களின் அடிப்படையில் செயல்படும் கட்சி:


நேற்று பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ஜன் சுராஜ் அரசியல் கட்சியாக உருவானால், பொது, ஓபிசி, முஸ்லிம் என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படும் என தெரிவித்தார். அதாவது, "கட்சியின் தலைமைத்துவம் குறித்து ஆழமான விவாதம் நடந்துள்ளது. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் இந்த ஐந்து வகுப்புகளில் ஒருவருக்கு கட்சியை வழிநடத்த வாய்ப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு தலைவர் என,  இந்த ஐந்து வகுப்பினருக்கும் கட்சியை வழிநடத்த வாய்ப்பு வழங்கப்படும். இரண்டாவது பரிந்துரை, இரண்டு வருடங்கள் வாய்ப்பு பெற வேண்டும், ஏனென்றால்  ஒரு வருடத்தில் பெரிய தாக்கத்தை முடியாது” என பிரசாந்த் கிஷோர் கூறினார்.


பீகார் அரசியல்:


மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பை மாற்ற பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் திட்டத்தையும் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான RJD அல்லது நிதிஷ் குமார் தலைமையிலான JD(U)  மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பீகாருக்கான,  அரசியலுக்கு மாற்றாக ஜன் சுராஜ் எனும் கட்சியை பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ளார்.


இதனிடையே, “பீகாரில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், மாநிலத்தில் புதிய கட்சி அல்லது புதிய விருப்பத்தை மக்கள் விரும்புகிறார்கள். இதற்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளாக லாலு பிரசாத், நிதிஷ் மற்றும் பாஜகவால் பொதுமக்கள் துயரத்தில் உள்ளனர். அதை பொதுமக்கள் பார்க்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை, ஆனால் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரியவில்லை" என்று கிஷோர் கடந்த மாதம் கூறினார்.


கடந்த சில தேர்தல்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கான வியூகங்களை வகுத்து கொடுத்து பிரபலமான பிரசாந்த் கிஷோர், தற்போது தானே முழு நேர அரசியல்வாதியாக மாறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அவரது அரசியல் எதிர்காலத்தை காண பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.