இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு வெளியுறவு அமைச்சகமும் பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து 2+2 மாநாடு நடத்தி வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், இந்தாண்டுக்கான மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது.


இந்திய - அமெரிக்க உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் 2+2 மாநாடு:


டெல்லியில் தொடங்கிய 2+2 மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் 
லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில் இந்திய தரப்பு பங்கேற்றது.


இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆண்டனி பிளிங்கன், "ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் குவாட் கூட்டமைப்பின் மூலம் எங்கள் கூட்டணியை வலுப்படுத்துவது உட்பட, சுதந்திரமான, திறந்த, வளமான, பாதுகாப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பகுதியை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.


கடல்சார் வர்த்தகத்தை மேம்படுத்துதல், வணிகச் சாட்டிலைட் தரவுகளைப் பகிர்ந்துகொள்வது, அவற்றின் திறனை அதிகரிப்பது, எடுத்துக்காட்டாக, சட்டவிரோதமாக ரகசிய தகவல்களை திருடுவது, போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் பகுதியில் மனிதாபிமான நிவாரணம் மற்றும் பேரிடர் மீட்பு முயற்சிகளையும் நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம்.


"முக்கியமான தூண்களில் ஒன்றாக பாதுகாப்பு உள்ளது"


பொருளாதார வாய்ப்பை விரிவுபடுத்தும் அதே வேளையில், எங்கள் பொருளாதாரங்களை மீண்டெழ செய்வதற்கும், எங்கள் சமூகங்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் புதுமையின் சக்தியை ஒன்றாகப் பயன்படுத்துகிறோம்.


செமிகண்டக்டர்கள் மற்றும் மேம்பட்ட உயிரித் தொழில்நுட்பத்துறையில் சாதித்துள்ள ஒத்துழைப்பு, தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் விண்வெளித்துறையில் நமது கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத் திட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் ஆகியவற்றில் இது தெளிவாக தெரிகிறது" என்றார்.


தொடர்ந்து பேசிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "வியூக ரீதியான நலன்கள், மேம்பட்ட பாதுகாப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பின் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை இந்தியா - அமெரிக்க இருதரப்பு உறவு கண்டுள்ளது. நமது இருதரப்பு உறவின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக பாதுகாப்பு உள்ளது.


இந்தியாவும் அமெரிக்காவும் முன்னெப்போதையும் விட நெருக்கமாக இருக்கும் நேரத்தில் உங்களின் இந்திய வருகை அமைந்துள்ளது.
வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும், முக்கியமான மற்றும் நீண்ட கால பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். திறன் மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய கூட்டுறவில் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்றார்.