ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அகமதாபாத்தில் இருந்து செல்லும் அசர்வா-உதைபூர் எக்ஸ்பிரஸ் ரயில், உதைபூரில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உதய்பூரின் ஜாவர் மைன்ஸ் காவல் நிலையத்தின் கீழ் வரும் கெவ்டா கி நால் பகுதிக்கு அருகிலுள்ள ஓதா பாலத்தின் ரயில் தடங்களை சேதப்படுத்த சுரங்க வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி அனில் குமார் விஷ்னோய் கூறுகையில், "வெடி விபத்து குறித்து அப்பகுதி மக்கள் காலையில் எங்களுக்குத் தெரிவித்தனர். தண்டவாளத்தில் சில வெடிபொருட்களை கண்டுபிடித்துள்ளோம். அதற்கு காரணமானவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.


 






இச்சம்பவம் கவலை அளிப்பதாக்க கூறிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க காவல்துறை தலைமை இயக்குநர் உமேஷ் மிஸ்ராவுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.


அகமதாபாத்தில் உள்ள அசர்வா ரயில் நிலையத்தில் இருந்து அசர்வா-உதைபூர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெடி சம்பவத்தை தொடர்ந்து, துங்கர்பூர் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தண்டவாளங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சர்மா தெரிவித்தார். போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதேபோல, தமிழ்நாட்டில் கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், உயர் கருகி உயிரிழந்த முபின், தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்தது.