உலகின் நீண்ட தூரம் பறக்கக்கூடிய புலம்பெயர் பறவையான அமூர் பருந்துகளின் பாதுகாப்பு குறித்தும் அவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மணிப்பூரில் திருவிழா ஒன்றை வனவிலங்கு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அமூர் பருந்து
மணிப்பூர் மாநிலம், தமெங்லாங் மாவட்ட வனவிலங்கு ஆணைய தலைமையகத்தில் நாளை ஏழாவது முறையாக இந்த விழா நடைபெற உள்ளது.
இந்தியர்களால் 'சிறப்பு விருந்தாளிகள்' என்று அழைக்கப்படும் இந்த அமூர் பருந்து ஒரு வேட்டையாடிப் பறவை. வட கொரியாவிலிருந்து ரஷ்ய-சீன எல்லையில் அமைந்துள்ள அமூர் நதி வரை இவற்றின் வாழிடம் என்பதால் இவை அமூர் பருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன.
அமூர் பருந்துகள் பால்கன் குடும்பத்தைச் சேர்ந்த உலகின் மிக நீண்ட தூரம் பயணிக்கக்க்கூடிய பறவைகள் ஆகும். ஆண்டுக்கு சுமார் 20,000 கிமீ வரை பயணம் மேற்கொள்ளும் இப்பறவைகள் ஆப்பிரிக்காவுக்கு இடைவிடாமல் பயணம் மேற்கொள்ளும் முன் தங்களுக்கு வேண்டிய உணவைப் பெற இந்தியப் பகுதிகளுக்கு வருகை தந்து செல்கின்றன.
நவம்பரில் இந்திய வருகை
பொதுவாக குளிர் காலத்தில் தென்னாப்பிரிக்க பகுதிகளுக்கு இடம்பெயரும் இந்த அமூர் பருந்துகள் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணித்து வருகின்றன.
இச்சூழலில், மனித-இயற்கை உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், தமெங்லாங்கில் உள்ள மக்களின் வாழ்க்கையில் இந்த சிறிய பறவையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் வகையிலும் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி, நவம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது..
அந்த வகையில் நாளை கொண்டாடப்பட உள்ள இந்தத் திருவிழாவில், மணிப்பூர் வன, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் தொங்கம் பிஸ்வஜித் சிங், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர், அவாங்போ நியூமாய் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
அமூர் பருந்துகளை பாதுகாக்க திருவிழா
முன்னதாக இத்திருவிழா குறித்துப் பேசிய தமெங்லாங் மாவட்டப் பிரிவு வன அலுவலர் (டிஎஃப்ஓ) அமன்தீப், "திருவிழா கொண்டாடுவதற்கான இடமாக மட்டுமல்லாமல், வெவ்வேறு பின்னணியில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் இருக்கிறது.
இத்திருவிழாவின் போது அமூர் பருந்துகளை பாதுகாப்பது குறித்து பல புதிய யோசனைகளைப் பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.
தற்போதைய தலைமுறையினர் அமூர் பருந்துகள் மற்றும் வனவிலங்குகள் மீது கருணை காட்டுவதையும் இந்த விழா ஊக்குவிக்கும். இந்தப் பறவைகளை பாதுகாப்பதற்காக உள்ளூரில் கடைபிடிப்பதற்கான ஏதுவான வழிமுறைகளை தொகுத்து, பாரம்பரிய அறிவு வங்கிகளையும் உருவாக்கி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்குகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த அமூர் பருந்துகளின் தங்குமிடத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மணிப்பூரின் தமெங்லாங், சேனாபதி மாவட்டங்களின் துணை ஆணையர்கள் (DCs) முன்னதாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் இந்த நீண்ட தூர புலம்பெயர்ந்த பறவைகளின் பாதை மற்றும் சுற்றுச்சூழலின் முறைகளை ஆய்வு செய்வதற்கு இந்தியா சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.