குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து மேற்குவங்க அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருக்கு எதிராக பாஜக அமைச்சர் புகார் அளித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக கருத்து தெரிவித்த மேற்குவங்க அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அகில் கிரிக்கு எதிராக பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி இன்று புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் ஹூக்ளி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக லாக்கெட் சட்டர்ஜி, டெல்லியின் நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் புகார் அளித்தததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின (வன்கொடுமைகள் தடுப்பு) (எஸ்சி/எஸ்டி) சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்து அதிகாரிகள் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து லாக்கெட் சட்டர்ஜி கூறுகையில், "மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும். அவரது அரசில், அகில கிரி அமைச்சராக உள்ளார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் டெல்லிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் எஸ்சி/எஸ்சி சமூகத்தைப் பற்றி பொதுவில் நிறைய பேசலாம். ஆனால், இதுதான் அந்த கட்சி அமைச்சர்களின் உண்மையான முகம்" என்றார்.
சர்ச்சையான அந்த வீடியோவில், மேற்குவங்க எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியை அமைச்சர் அகில் கிரி விமர்சித்து பேசி உள்ளார். அதில், "அவர் (சுவேந்து அதிகாரி) நான் அழகாக இல்லை என்கிறார். நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்.
நாங்கள் யாரையும் அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதில்லை. குடியரசுத் தலைவர் (இந்தியாவின்) பதவியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நமது குடியரசு தலைவர் எப்படி இருக்கிறார்?" என அகில் பேசியுள்ளார்.
ஆனால், வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் ஆராயப்படவில்லை. தனது கருத்துக்கு அகில் கிரி மன்னிப்பு கேட்டிருந்தாலும், பாஜக தலைவர்கள் அவரை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அகில் கிரி, "நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எனக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறதோ, அதேபோல, நாட்டின் தலைவரான இந்தியக் குடியரசுத் தலைவரையும் மதிக்கிறேன். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நானும் பணியாற்றுகிறேன்.
ஆனால், கடந்த சில நாட்களாக, பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி எனக்கு எதிராகவும், எனது தோற்றம் குறித்தும் கூறிய கருத்துக்கள் என்னை அவமானப்படுத்தியதுடன், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. நான் ஒரு வயதானவன், தவறுதலாக, என் கோபத்தின் உணர்ச்சிப் பெருக்கினால் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டேன். இப்படி ஒரு கருத்தை கூறியதற்கு வருந்துகிறேன்" என்றார்.
பாஜக எம்பியான சௌமித்ரா கான், அகில் கிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்திற்கு (NCW) கடிதம் எழுதியுள்ளார். அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.