பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்ததற்காக ராஜஸ்தானை சேர்ந்த ஒரு ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டிக்கான மோதல் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வென்றது.
இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடி வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்ததற்காக பள்ளி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள நீரஜா மோடி சர்வதேசப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் நஃபீசா அட்டாரி. இவர் பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதை அடுத்து அதை தனது வாட்சப் ஸ்டேட்டஸில் பகிர்ந்து நாம் வெற்றிபெற்றுவிட்டோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த பெற்றோர் ஒருவர் ’நீங்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறீர்களா?’ என அவரிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர் ஆம் என பதிலளித்துள்ளார். இதையடுத்து இதை ஒரு புகாராக பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துச் சென்றுள்ளார் அந்த பெற்றோர்.
பள்ளி நிர்வாகம் இதனையடுத்து அந்த ஆசிரியரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. அதுகுறித்த அறிவிப்பில், ‘’நீரஜா மோடி பள்ளி நிர்வாகத்தினர் கூடி எடுத்த முடிவின்படி ஆசிரியர் தனது பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது போலீஸிலும் புகார் அளித்துள்ளது.
நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை அடுத்து இது குறித்து சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நஃபீசா, அதில்,’நான் பாகிஸ்தானை ஆதரிக்கின்றேன் என்று விளையாட்டாகத்தான் சொன்னேன்.நான் இந்திய பிரஜை’ என்று விளக்கமளித்துள்ளார்.