ராஜஸ்தானில் அரசு நடத்தும் மலிவு விலை உணவகத்தில் பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் உணவை பன்றிகள் சாப்பிட்ட வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த அலட்சியப் போக்கை கண்டித்து விசாரணை வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
மலிவு விலை உணவகம்
ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள எம்.எஸ்.ஜே கல்லூரிக்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோவில், உணவு பரிமாறும் தட்டுகளை பன்றிகள் நக்குவதைக் காண முடிகிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஏழைகள் உணவு உண்பதற்காக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த மலிவு விலை உணவகம் மாநிலம் முழுதும் 25 இடங்களில் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு மதிய உணவை 8 ரூபாய்க்கு வழங்கி வருகின்றனர்.
ஷெஹ்சாத் பூனவல்லா ட்வீட்
இந்திரா ரசோய் யோஜனா என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் இந்த தட்டுகள் ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வீடியோவை பாஜக தலைவர் ஷெஹ்சாத் பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அவரது பதிவில், "அருவருப்பானது" மற்றும் "அவமானகரமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவமானகரமானது
“இந்திரா ரசோய் மையங்களில் ஏழைகளுக்கான தட்டுகளில் இருந்து பன்றிகள் சாப்பிடுகின்றன! இது சுகாதாரமற்றதும், அருவருப்பானதும் மட்டுமல்ல, இது அவமானகரமானது! கண்டிப்பாக இதுகுறித்து விசாரணை நடைபெற வேண்டும்", என்று பாஜக தலைவர் அந்த வீடியோவை ட்வீட் செய்துள்ளார். இந்த வீடியோவைக் கண்ட பலரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
உடனடி நடவடிக்கை
சம்பவம் நடைபெற்ற சமையலறை மதர் தெரசா என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டது. இந்த வீடியோ வைரலாக பரவியதைத் தொடர்ந்து, பரத்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. வீடியோ வைரலான பிறகு, பரத்பூர் நகராட்சி அதிகாரி, சில முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும், அந்த அமைப்பின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். இந்த சம்பவத்தை பாஜக-வினர் பெரிதாக்கியுள்ள நிலையில், ஏழைகள் உணவருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் மீது கறை விழுந்துள்ளது. பலர் தற்போது அதில் உணவருந்த அஞ்சுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.