கடந்த 2021ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்கத்தை தனக்கு தானே குத்தகை விட்டதாக அவர் மீது பாஜக புகார் அளித்தது. இதன் காரணமாக, சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. இந்நிலையில், இதுகுறித்து இன்று பேசியுள்ள சோரன், "நான் குற்றவாளி என்றால், என்னை ஏன் விசாரிக்கிறீர்கள்? முடிந்தால் வந்து என்னை கைது செய்யுங்கள்.
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது பழங்குடியின முதலமைச்சரை துன்புறுத்துவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க பாஜக மத்திய அமைப்புகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நான் பயப்படவில்லை.
அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. அவர்களை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்களின் குரலை நசுக்குகிறது. இந்த சதிக்கு தகுந்த பதில் கிடைக்கும்" என்றார்.
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக கட்சி தொண்டர்கள் மத்தியில் தன்னுடைய வீட்டின் வெளியே உரையாற்றிய சோரன், "பழங்குடியினர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராய்ப்பூருக்கு (சத்தீஸ்கர்) விமானத்தில் செல்ல உள்ளேன். பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசியல் பழிவாங்கலில் பிஸியாக இருக்கும்போது தொழிலதிபர்கள் தப்பியோட அனுமதிக்கிறது" என்றார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ரமேஷ் பாயிஸுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் பரிந்துரை அளித்தது தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் சோரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு மத்தியில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி மேற்கொள்வதாக ஆளும் கூட்டணி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மூவர் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை மேற்கொண்ட சோரன், "பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைத் தடுப்பதே என்னை துன்புறுத்துவதற்கான முயற்சியின் பின்னணியில் உள்ளது. நிலப்பிரபுத்துவ மக்கள் வெற்றிபெற மக்களை சுரண்டினார்கள். நம் முன்னோர்கள் இழக்க கற்றுக்கொடுக்கவில்லை. போராடி வெற்றி பெற கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்" என பதிவிட்டிருந்தார்.