சச்சின் பைலட் இன்று நடைபெறும் எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பிறகு முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 


காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்படி, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட்டும், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் போட்டியிடுகின்றனர். 


20 ஆண்டுகளுக்கும் பிறகு நடைபெற உள்ள முதல் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. இச்சூழலில், பல காங்கிரஸ் தலைவர்கள், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 






இந்த நிலையில், ராகுல் மற்றும் சோனியாவின் ஆதரவுபெற்ற அசோக் கெலாட் தான் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவர், காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக அதிக வாய்ப்பு உண்டு. அப்படி கெலாட் விலகிவிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சராக சச்சின் பைலட் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது.


இதனையடுத்து, இன்று மாலை ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியில் தலைமையக மூத்த தலைவர் மல்லிகார்ஜின் கார்கே தலைமை தாங்குகிறார். மேலும், மாநில பொறுப்பாளர் அஜய் மாக்கன் கலந்து கொள்கிறார். 


கடந்த 2020 ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு சச்சின் பைலட் தான் வகித்து வந்த துணை முதலமைச்சர் பதவியை இழந்தார். இந்த நிலையில் பைலட் இன்று நடைபெறும் எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பிறகு முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 






அனைத்து எம்.எல்.ஏக்களும் சச்சின் பைலட்டை ஆதரிப்பதாக அம்மாநில அமைச்சர் ராஜேந்திர குடா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இவரின் கருத்துபடி, சச்சின் பைலட் ராஜஸ்தான் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் என்பது உறுதியானது. 


இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் "ஒரு நபர், ஒரு பதவி" கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். தற்போது வரை காந்தி அல்லாதவராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார்.