"ஆபரேஷன் மேக்சக்ரா" என்ற பெயரில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இந்தியா முழுவதும் 56 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்தது தொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்று 20 மாநிலங்களில் 56 இடங்களில் இந்த அதிரடி சோதனையை நாடு தழுவிய அளவில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் மேக்சக்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது.


சிங்கப்பூரிலுள்ள இண்டர்போல் அளித்த தகவலின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நாடு தழுவிய சோதனை மேற்கொண்டனர். இந்த குற்றசெயலில் ஈடுபட்ட மொத்த குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களை பிடிக்க 200க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது. 






இந்த குற்றம் தொடர்பால 2021 நவம்பரில் நடத்தப்பட்ட சோதனைகளின் தொடர்ச்சியாகவே தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அதற்கு ’ஆபரேஷன் கார்பன்’ என்று பெயரிப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சோதனை குறித்த முழுவிவரங்களும் இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த வாரம், குழந்தைகள் ஆபாச படங்கள் தொடர்பான வழக்குகளை கண்காணிப்பதற்கான வழிமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த விவகாரத்தில் இணையதள நிறுவனங்களிடம் இருந்து நிலை அறிக்கையையும் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.


கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், குழந்தைகள் ஆபாசப் படங்கள் குறித்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒரு விசாரணையின் போது, கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களிடம் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.