நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேரதல் நடைபெற்றது.
புதுமுகங்களுக்கு முதலமைச்சர் பதவி:
இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற மிசோரத்தில் சோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிய இந்த மூன்று மாநிலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் கருதப்பட்டது.
இந்த மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தாலும் அந்தந்த மாநில முதலமைச்சர்களை அறிவிப்பதில் தொடர் இழுபறி நீடித்தது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஏற்கனவே முதலமைச்சராக பதவி வகித்தவரும், மூன்று முறை அந்த மாநில முதலமைச்சராக பொறுப்பு வகித்தவருமான சிவராஜ்சிங் சவுகானுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அவர் சிவராஜ்சிங் சவுகான் அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
மூத்த தலைவர்களுக்கு கல்தா:
அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரும், அந்த மாநில பா.ஜ.க.வில் செல்வாக்கு மிகுந்தவருமான வசுந்தரா ராஜே தேர்வாவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மேலும், முன்னாள் மத்திய அமைச்சர்களான அர்ஜூன்ராம் மேவால், கஜேந்திர ஷெகாவத், தியாகுமாரி, சி.பி.ஜோஷி, பாலக்நாத் யோகி, சதீஷ் பூனியா, தியாகுமாரி ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் ராஜஸ்தான் முதலமைச்சராக முதன்முறை எம்.எல்.ஏ.வான பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிய மாநிலங்களில் புது முகங்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், இந்தளவு யாருமே எதிர்பார்க்காத புது முகங்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அவர்கள் கட்சியினர் மத்தியிலே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சிரயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.விற்கு பலம் சேர்க்கும் முக்கிய தலைவர்களாக கருதப்படுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவிகளை கட்சித் தலைமை வழங்காதது அந்தந்த தலைவர்களுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தலைமையின் இந்த முடிவு அடுத்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு சாதகமா அமையுமா? அல்லது பாதகமா அமையுமா? என்பது அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில்தான் தெரிய வரும். மேலும், முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருந்தவர்களின் செயல்பாடுகளில் கட்சித் தலைமை முழு திருப்தி அடையாததுமே அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.