ராஜஸ்தான் மாநில அரசு, கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற உள்ளது. அதற்கான சட்ட மசோதாவும் அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த சட்டம் குறித்தும், எப்போது தாக்கலாகிறது என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்.

ராஜஸ்தான் அரசின் மதமாற்ற தடை சட்டம் என்ன சொல்கிறது.?

  • ராஜஸ்தான் அரசின் புதிய சட்டவிரோத மதமாற்ற தடை சட்டம், தவறான தகவல் அளித்தோ, மோசடி செய்தோ அல்லது கட்டாயத்தின் பேரில் ஒரு நபரின் மதத்தை மாற்றும் முயற்சியை தடை செய்கிறது.
  • மதம் மாற விரும்புவோர், 60 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மதம் மாறுபவர் சுய விருப்பத்தின் பேரில் மாறுகிறாரா, அல்லது கட்டாயத்தின் பேரில் மாறுகிறாரா என மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஆய்வு செய்து உறுதி செய்த பின்னர் அனுமதி அளிக்க வேண்டும்.
  • சட்டவிரோத மதமாற்றத்திற்காக ஒரு திருமணம் நடைபெற்றால், அந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க குடும்ப நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

  • சட்டவிரோதமாக மதம் மாற்ற முயற்சி செய்வோருக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
  • பெண்கள், சிறு வயதினர், பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள், பழங்குடிகளிடம் மதமாற்றம் குறித்து பிரசாரம் செய்ய முயற்சித்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.
  • ஒரு பெரிய குழுவை மதமாற்றம் செய்ய முயற்சித்தால், 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும்.

அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டப்பேரவையில் தாக்கல்

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையில், பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டசபை கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி, இன்று நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.