ராஜஸ்தானில் கடன் பிரச்சினைகளை தீர்க்க சிறுமிகள் ஏலம் விடப்படுவதாக பிரபல இந்தி நாளிதழ் ஒன்று அக்டோபர் 25ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக, 8 முதல் 18 வயது சிறுமிகள் முத்திரை தாள்கள் மூலம் ஏலம் விடப்படுவதாக வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், இது தொடர்பாக ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், "இத்தகைய கொடூரமான குற்றங்களால் பாதிக்கப்பட்ட பலரின் துன்பங்களை ஊடகங்கள் ஆவணப்படுத்தியுள்ளன.


ஊடக அறிக்கையில் வெளியான செய்திகள், உண்மையாக இருந்தால், இத்தகைய அருவருக்கத்தக்க நடைமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை மீறல்களே ஆகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 






கடன் பிரச்னையை தீர்க்க சிறுமிகள் ஏலம் விடப்படாத பட்சத்தில், அவர்களின் தாயார்கள் சாதி பஞ்சாயத்தின் உத்தரவின் பேரில் பாலியல் வன்கொடுமைக்க உள்ளாக்கப்படுவது தெரிய வந்துள்ளது. கடன் வாங்கிய குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மும்பை, டெல்லி மற்றும் வெளிநாடுகளுக்கு கூட அனுப்பி வைக்கப்படுகிறார்கள்


ஜெயப்பூரில் இருந்து 340 கிமீ தொலைவில் அமைந்துள்ள பில்வாடாவுக்கு செய்தியாளர்கள் குழு சென்ற பிறகு, இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாங்கிய 15 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்துவதற்காக ஒரு நபர், தன்னுடைய சகோதரி மற்றும் நான்கு மகள்களை விற்றுள்ளார்.


தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது நோட்டீஸில், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையையும், நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையையும் நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.


மேலும், "மனித உரிமைகள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பெண்களின் கண்ணியத்திற்கு இடையூறு விளைவிக்கும் சாதி அடிப்படையிலான அமைப்பை ஒழிக்க, அரசியலமைப்பு விதிகள் அல்லது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, கிராம பஞ்சாயத்தின் செயல்பாடுகளை மாநில அரசு எவ்வாறு உறுதி செய்கிறது என்பதையும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும்" என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ராஜஸ்தானில் உள்ள காவல்துறை தலைமை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஊக்குவிப்போர் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்த விவரம் சமர்பிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.