குடியரசுத் தலைவர் காலில் விழ முயற்சி:


கடந்த வாரம், ராஜஸ்தானுக்கு சென்ற குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் பாதுகாப்பில் விதி மீறல் நடந்தது. குடியரசு தலைவர் முர்மு பாலியில் சாரணர் வழிகாட்டி ஜம்போரியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜஸ்தான் சென்றிருந்தார். பாதுகாப்பை மீறி மாநில பொது சுகாதார பொறியியல் துறையில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் முர்முவின் காலில் விழ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


இந்நிலையில், அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காலில் விழ முயன்ற அம்பா சியோலை இடை நீக்கம் செய்து நீர் விநியோக துறையின் தலைமைப் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். 


இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "பொது சுகாதார பொறியியல் துறையின் இளநிலைப் பொறியாளரான அம்பா சியோல், பாலி மாவட்டம் ரோஹெட்டில் ஜனவரி 4 அன்று சாரணர் வழிகாட்டி ஜம்போரியின் தொடக்க நிகழ்ச்சியின் போது ஹெலிபேடில் குடியரசு தலைவர் பாதங்களைத் தொட முயன்று பாதுகாப்பு விதியை மீறினார். எனவே, ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் விதி 958இல் விதி 342இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட அம்பா சியோலை உடனடியாக இடைநீக்கம் செய்ய உத்தரவிடுகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு குளறுபடி:


இதேபோல, சமீபத்தில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி,  கர்நாடக மாநிலம் ஹூப்பாலியில்  நடைபெற்ற தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.


இவ்விழா நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி வந்து கொண்டிருந்த போது, காரில் ஓரத்தில் நின்றபடியே பொதுமக்களுக்கு கை அசைத்து கொண்டு வந்தர். அப்போது, சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், பிரதமருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை மீறி, கையில் மாலையுடன் திடீரென மோடியின் அருகே வந்தார். 


இதை பார்த்த காவலர்கள் உடனடியாக சுதாரித்து, அவரை பிடித்து, சாலையின் ஓரத்தில் கொண்டு சென்றனர். மாலையுடன் வந்த நபரிடமிருந்து மாலையை பாதுகாப்பு பிரிவினர் பிடுங்கினர். ஆனால், அதை காவலரிடம் இருந்து பிரதமர் மோடி வாங்கி காரினுள் வைத்து கொண்டார்.


பிரதமருக்கு  SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பிரதமர் எங்கு சென்றாலும் அவருக்கு எந்தவித பாதிப்பும் நிகழாத வகையில், பாதுகாப்பு அளிப்பது, இவர்களின் கடமையாகும்.


மாநில காவல்துறை மற்றும் எஸ்.பி.ஜி. ஆகியோரின் பாதுகாப்பு இருந்து போதும் , ஒரு நபர் எப்படி பிரதமரின் அருகே மாலையுடன் வந்தார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.