சமீப காலமாக, உணவு டெலிவரி நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. பெருந்தொற்றுக்கு பிறகு, உணவினை இணையத்தில் ஆர்டர் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. அதில், பணிபுரியும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


துரத்திய நாய்:


அதே நேரம், உணவினை டெலிவரி செய்யும் டெலிவரி ஊழியர்கள் கடும் சிரமத்தை சந்திப்பதும் சமீப காலமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதன்கிழமை இரவு, உணவினை டெலிவரி செய்ய சென்ற டெலிவரி ஊழியரை நாய் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாய் துரத்தியதால் செய்வதறியாது தவித்த அந்த நபர் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 


சம்பவம் நடந்த பஞ்சாரா ஹில்ஸ் பகுதி காவல்துறை ஆய்வாளர் எம். நரேந்திரா இதுகுறித்து பேசுகையில், "காயமடைந்தவர், யூசுப்குடாவில் உள்ள ஸ்ரீராம்நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் (23) என அடையாளம் காணப்பட்டார்.


அவர் நிஜாம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் (நிம்ஸ்) சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.


மாடியில் இருந்து குதித்தார்


உணவு விநியோக செயலியான ஸ்விக்கியில் பணிபுரியும் ரிஸ்வான். லும்பினி ராக் கேஸில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்தார். ஷோபனா என்ற வாடிக்கையாளருக்கு உணவுப் பொட்டலத்தை வழங்குவதற்காக சென்றிருந்தார்.


ரிஸ்வான் வாடிக்கையாளரிடம் பார்சலைக் கொடுக்கும்போது, ​​​​அவரது குடும்பத்தின் செல்ல நாய், ஜெர்மன் ஷெப்பர்ட், வீட்டை விட்டு வெளியேறி அவர் மீது பாய்ந்தது. தாக்கப்படுமோ என்ற அச்சத்தில் ரிஸ்வான் பாதுகாப்புக்காக ஓடி தப்பிக்க முயன்றார். ஆனால், நாய் அவரை துரத்தியது. அவர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார்.


பலத்த காயம்


இதில், ரிஸ்வான் தரையில் விழுந்து காயம் அடைந்தார். இதற்கிடையில், ஷோபனா மற்ற அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக NIMS க்கு அனுப்பினர். அவர் இன்னும் சுயநினைவின்றி இருக்கிறார். அவரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது" என்றார்.


வியாழன் மாலை ரிஸ்வானின் சகோதரர் முகமது காஜா அளித்த புகாரின் பேரில், பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் ஷோபனா மீது பிரிவு 336 (அலட்சியம் காரணமாக காயங்கள்) கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.


இதேபோல, கான்பூரின் சர்சய்யா காட் பகுதியில் பிட்புல் (pit bull) நாய் ஒன்று மாட்டை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதேபோல், காசியாபாத்தைச் சேர்ந்த சிறுவனின் முகத்தை நாய் கொடூரமாக கடித்துக் குதறிய நிலையில் முன்னதாக அவரது உடலில் 150 தையல்கள் போடப்பட்டது.