ஜோதி வடிவில் தோன்றிய ஐயப்பன்:


சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளான, ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டும், பந்தளம்  அரண்மனையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட,  தங்கம் மற்றும் வெள்ளி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஐயப்ப சுவாமி மூன்று முறை ஜோதியாய் காட்சி அளித்தார்.


பக்தர்களின் முழக்கங்களால் அதிர்ந்த சபரிமலை:


மகரஜோதி தரிசனத்திற்கான ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுத்த நிலையில், பகல் 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக சபரிமலைக்கு சென்ற பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்தனர். சபரிமலை சன்னிதானம்,  புல்லுமேடு, சரங்கொத்தி  மற்றும் பாஞ்சாலி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். சரியாக மாலை 6.20 மணியளவில் ஒளிவடிவில், மகரஜோதியை காட்சியளித்த ஐயப்பனை பக்தர்கள் ஆரவாரமுடன் கண்டு பிரார்த்தனை செய்தனர். சபரிமலைக்கு நேர் எதிரே உள்ள பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் தோன்றிய ஐயப்பனை கண்டதும், சுவாமியே சரணம் ஐயப்பா என பக்தர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை பிளந்தது. 


சுவாமி தரிசனம்:


அதனைத் தொடர்ந்து திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும் என்றும், அதன்பிறகு நாளை காலை தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாதுகாப்பு பணிகள் தீவிரம்:


மகரஜோதியையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், சபரிமலையில் வனக்காவலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கால்நடை மருத்துவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 


பக்தர்கள் தங்கியிருக்கும் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க ரோந்து பணியை முடக்கி விட்டுள்ளனர். மேலும் எருமேலி - கரிமலை சாலை, புல்லுமேடு பகுதியில் கூடுதல் தீயணைப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத்துறைக்கு சொந்தமாக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றது.  அதேபோல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பன்றிகள் பிடித்து வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. 


மகரவிளக்கு பூஜை: 


கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம், 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். இதனிடையே மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது.  அதைதொடர்ந்து, மகரஜோதி தரிசனத்திற்கான முன்பதிவும் ஏற்கனவே நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.