ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் குப்பைகளை சேமித்து வந்துள்ளார். அவரை பற்றி சிலர் கலாய்த்து மீம்ஸ் வெளியிட்ட காரணத்தால் அந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இளைஞர்களின் பொறுப்பற்ற செயல்:


பிரதாப் சிங் என்ற முதியவர், லோஹாவத் கிராமத்தில் குப்பைகளையும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் சேமித்து வந்துள்ளார். இவற்றை விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். கை வண்டி மூலம் குப்பை பொருட்களை சேமித்து வந்த இவர், கிராமத்தில் பரிட்சயமான நபராக இருந்துள்ளார்.


'பாபாஜி' என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். அவரது கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவரை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. பகடி செய்யும் விதமாக வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.


இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "பிரதாப் சிங்கை பின்தொடர்ந்து சென்று, ​​அவரை படம்பிடித்துள்ளனர். குப்பை பொருள்களை வாங்க விரும்புகிறீர்களா என அவர்களை நோக்கி பிரதாப் சிங் கேட்டுள்ளார். ஆனால், அவரை கேலி செய்து மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்" என தெரிவித்தது.


தற்கொலை செய்து கொண்ட முதியவர்:


எக்ஸ் தளத்தில் வைரலான ஒரு வீடியோவில், பிரதாப் சிங்கை சிலர் பின்தொடர்ந்து சென்று கேலி செய்வது பதிவாகியுள்ளது. அவரை பற்றிய வீடியோக்கள் அதிகமாக வைரலாகியுள்ளது. இதனால், அவர் மேலும் பிரபலமாகியுள்ளார்.


வீடியோக்கள் வைரலானதாலும் தேவையற்ற மன உளைச்சலாலும் வருத்தமடைந்த பிரதாப் சிங் தற்கொலை செய்து கொண்டார். "நெடுஞ்சாலை அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.


தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.