பிரதமர் மற்றும் பிற வி.வி.ஐ.பி.க்களுக்காக தெருக்கள் மற்றும் நடைபாதைகள் ஒரு நாள் மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது. அதை ஏன் மற்ற அனைவருக்காகவும் நாள்தோறும் செய்ய கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதிரடி காட்டிய மும்பை உயர் நீதிமன்றம்:
எம். எஸ். சோனக் மற்றும் கமல் கட்டா ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த கருத்தை தெரிவித்துள்ளது. சுத்தமான நடைபாதை மற்றும் நடக்க பாதுகாப்பான இடம் இருப்பது ஒவ்வொரு தனிநபரின் அடிப்படை உரிமையாகும். அதை வழங்குவதற்கு மாநில அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விரிவாக பேசிய நீதிபதிகள், "நகரத்தில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் அங்கீகரிக்கப்படாத வணிகர்களின் பிரச்சனையை தீர்க்க என்ன செய்ய முடியும் என்று அதிகாரிகள் எப்போதும் யோசிக்க முடியாது. இப்போது கடுமையாக ஏதாவது செய்ய வேண்டும்" என்றார்கள்.
மும்பையில் குறிப்பிட்ட இடங்களை சட்டவிரோதமாக இயங்கும், அனுமதி வழங்கப்படாத வணிகர்கள் ஆக்கிரமிப்பதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், "பிரதமர் அல்லது சில வி.வி.ஐ.பி.க்கள் வந்தால், தெருக்களும், நடைபாதைகளும் உடனடியாகச் சுத்தம் செய்யப்பட்டு. அவர்கள் இருக்கும் வரை அப்படியே இருக்கும்.
"விவிஐபிக்காக மட்டும்தான் தெருக்களை சுத்தம் செய்யனுமா"
அது மட்டும் எப்படி செய்யப்படுகிறது? அதை ஏன் எல்லோருக்காகவும் செய்ய கூடாது? குடிமக்கள் வரி செலுத்துகிறார்கள். அவர்களுக்கு சுத்தமான நடைபாதையும், நடக்க பாதுகாப்பான இடமும் இருக்க வேண்டும். நடைபாதையும் நடக்க பாதுகாப்பான இடமும் அடிப்படை உரிமை.
நம் குழந்தைகளை நடைபாதையில் நடக்கச் சொல்கிறோம். ஆனால், நடக்க நடைபாதை இல்லை என்றால், நம் குழந்தைகளுக்கு என்ன சொல்வது? பல ஆண்டுகளாக, அதிகாரிகள் இப்பிரச்னையை எதிர்கொண்டு வருவதாக கூறி வருகின்றனர்.
அரசு கடுமையாக ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்வது என்று அதிகாரிகள் தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருக்க முடியாது. விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது. ஏனென்றால் விருப்பம் இருக்கும் இடத்தில் எப்போதும் ஒரு வழி இருக்கும்" என தெரிவித்தது.