சமீப நாட்களாக உலகமே உற்று நோக்கும் செய்தியாக தலிபான்களின் நகர்வு மட்டும் தான் இருக்கிறது. தலிபான்கள் தொடர்பாக இணையம் முழுவதும் ஹேஷ்டேக் விரவிக்கிடக்கிறது. இந்நிலையில், தலிபான் கிரிக்கெட் கிளப், (Taliban Cricket Club) என்ற பெயர் அதிர்ச்சியுடன் கலந்த கவனம் பெற்றது.
அட ஆப்கானிஸ்தானில் இப்படி ஒரு கிரிக்கெக் கிளப் இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். இதோ நம்மூரில் ராஜஸ்தானில் தான் இந்த கிரிக்கெட் கிளப் இருக்கிறது.
அண்மையில் ஜெய்சால்மர் மாவட்டத்தில் நடந்த ஒரு போட்டியில் இந்த அணி கலந்து கொள்ள. போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பெயரைக் கேட்டு திக்குமுக்காடிப் போயினர். பின்னர் அவர்கள் அந்தப் போட்டியில் இருந்தே விலக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் தலிபான் கிரிக்கெட் கிளப்புக்கு நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
போக்ரான் அருகே ஒரு சர்ச்சை கிளப்..
தலிபான் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டம், பானியானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமம் போக்ரானில் இருந்து 36 கி.மீ தொலைவில் இருக்கிறது. போக்ரான் இந்தியா முதலில் அணுஆயுத சோதனை நடத்திய இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக கண்காணிப்படுகிறது.
இதற்கு அருகில் இருக்கும் பானியானா கிராமத்தில் முஸ்லிம் சிறுபான்மையின மக்களே அதிகம் வசிக்கின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப்புக்கு தலிபான் கிரிக்கெட் கிளப் என்று பெயரிடப்பட்டுள்ளது தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து கிரிக்கெட் போட்டி ஒருங்கிணைப்பாளர் இஸ்மாயில் கான் கூறுகையில், தலிபான் கிரிக்கெட் கிளப் என்று சிலர் விவரம் அறியாமல் பெயர் வைத்துள்ளனர். அது குறித்து தெரிந்தவுடனேயே அந்த அணியை போட்டியில் இருந்து விலக்கிவிட்டோம் என்றார்.
பேர சொன்னா பயம் வரும்ல...
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று, ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் இறங்கியுள்ளனர். ஆனால், அந்நாட்டு மக்களோ எங்கே 1990-களில் தலிபான் ஆட்சி நடந்தபோது இருந்த கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாகுமோ என்ற அச்சத்தில் குவியல் குவியலாக வெளியேறி வருகின்றனர்.
சொந்த நாட்டு மக்களுக்கே சிம்ம சொப்பனமாக இருக்கும் பெயர் தலிபான், அதனைக் கொண்டுவந்து கிரிக்கெட் டீமுக்குப் பெயராக வைத்தால் அதிர்ச்சி ஏற்படத் தானே செய்யும். அதனால் தான் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக தலிபான் பெயர் கொண்ட தலிபான் கிரிக்கெட் கிளப் என்ற அந்த அணியை அப்படியே புறக்கணித்துவிட்டனர்.