துணைராணுவப் படையான சிஆர்பிஎஃப் படையின் சீருடையில் மனைவியுடன் சுற்றித் திரிந்த வீரரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணைக்குப் பின் ஆலோசனை கூறி அனுப்பிவைத்தனர்.
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் இளம் பெண் ஒருவருடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவருடன் இருந்தது அவரது மனைவி என்பது உறுதியானது.
பின்னர் அவரிடம் மட்டும் போலீஸார் தனிப்பட்ட முறையில் பேசினர். அப்போது அவர்கள், அந்த நபர் ஏன் சீருடையில் தனிப்பட்ட விஷயங்களுக்காக வந்தார் என வினவினர். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சர்யம் அளித்தது.
அந்த வீரர் கூறியதாவது:
எனது மனைவிக்கு நான் ராணுவ உடையில் இருந்தால் பிடிக்கும். அதேபோல் தான் எனது மனைவியின் வீட்டாரும் நான் ராணுவ உடையில் இருப்பதை விரும்புவார்கள். அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவ்வப்போது இந்த உடையில் இருப்பேன். இவ்வாறு அந்த நபர் கூறினார்.
யதேந்திர சிங் என்ற அந்த நபர் 2017 ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இணைந்தார். அசாமுக்கு வெளியே அவர் பணிபுரிகிறார். இந்திய ராணுவத்தில் இணைய வேண்டும் என்பது அவருடைய ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.
அவரைப் போலீஸார் கைது செய்யவில்லை. வழக்குக் கூட பதிவு செய்யவில்லை. மாறாக அவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். மேலும் அவருக்குத் தேவையான ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளனர். வெறும் பெயில் பத்திரம் மட்டுமே அந்த வீரரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
சீருடையின் மாண்பு:
சீருடைக்கு என தனி மாண்பு உள்ளது. அதை அணிவதற்கான இடம், பொருள், ஏவலும் இருக்கிறது. ராணுவ, துணை ராணுவ வீரர்கள் சீருடையை எங்கெல்லாம் அணியலாம், அணியக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் உள்ளன. அந்த வகையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய யதேந்திரா சிங் தனது சொந்தக் காரணங்களுக்காக, சொந்த வேலையாக வெளியில் செல்லும் போது ராணுவ உடை அணிந்து சென்றுள்ளார். இது விதிமீறலாகவே கருதப்படுகிறது.
இருப்பினும் அவருடைய காரணங்களின் பின்னணியில் வேறு எந்த சதி வேலைக்குமான அடையாளமும் இல்லாததால் அவரை வெறும் எச்சரிக்கையுடன் போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல் நம்மூரிலும் போலீஸ் உடையில் கெத்து காட்ட உலா வரும் போலி போலீஸ் அவ்வப்போது சிக்குவதும் அது செய்தியாவதும் வாடிக்கையானது தான். அண்மையில் கூட ஆந்திர முன்னாள் முதல்வர், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் எனப் பலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சென்னை நபர் ஒருவர் தேனியில் பிடிபட்டார். அவர் தனது மனைவியை சமாளிக்க மட்டுமே தான் போலீஸில் இணைந்துவிட்டதாகக் கூறி ஊரை ஏமாற்றி வந்தார் என்ற கதை அனைவரும் அறிந்ததே.