ராஜஸ்தானில் நான்கு வீட்டு வேலையாட்கள், ஜோத்பூரில் உள்ள அவர்களது முதலாளியின் வீட்டில் மயக்க மருந்து கலந்த உணவைப் பரிமாறி விட்டு கொள்ளையடித்தனர்.  ஒரு பெண் உள்பட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர், சனிக்கிழமையன்று, கைவினைத் தொழிலதிபர் அசோக் சோப்ராவின் வீட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளுடன், தப்பிச் செல்லும் போது அவரது காரையும் எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.


நாகூர் மாவட்டத்தில் உள்ள குச்சமன் பகுதியில் அவர்கள் சென்ற கார் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் லக்ஷ்மி என்ற பணிப்பெண்ணின் மூலம் போலி அடையாளங்களுடன் பணியமர்த்தப்பட்டனர். 


கொள்ளை அடிக்கும் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அனைத்து கதவுகளையும் பூட்டி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.


 






இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் அம்ரிதா துஹான் கூறுகையில், "தொழிலதிபரின் மகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் மற்றும் அவரது இரண்டு டிரைவர்கள் மயக்க மருந்துகளின் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.


இரண்டு ஓட்டுநர்களைத் தவிர்த்து, சம்பவம் நடந்தபோது சோப்ரா, தனது இளைய மகள் அங்கிதா, அவரது தாயார் மற்றும் பேரன் ஆகியோர் அங்கு இருந்தனர். தொழிலதிபரின் தாய் மற்றும் பேரனைத் தவிர, ஒரு பெண் உட்பட நான்கு வீட்டு உதவியாளர்கள் சனிக்கிழமை இரவு அவர்களுக்கு (பாதிக்கப்பட்டவர்களுக்கு) மயக்க மருந்து கலந்த உணவைக் கொடுத்துவிட்டு, நகைகள் மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றனர்.


லக்ஷ்மி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சோப்ராவின் தாயைக் கவனித்துக் கொள்வதற்காகப் பணியமர்த்தப்பட்டார். மற்றவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டனர். நான்கு வீட்டு உதவியாளர்கள் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்கள். ஆனால், இந்த சம்பவத்தில் சில வெளியாட்களின் தலையீட்டை நாம் நிராகரிக்க முடியாது.


இந்த குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவரிடமும் போலீஸ் சரிபார்ப்பு எதுவும் செய்யப்படவில்லை. அனைவரும் டெல்லியில் இருந்து ஒரு ஏஜென்சி மூலம் பணியமர்த்தப்பட்டனர்" என்றார்.


வீட்டில் வேலை பார்த்த வேலை ஆட்களே வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.