ராஜஸ்தான் மாநிலத்தில் டீசல் தீர்ந்து நடுவழியில் 108 ஆம்புலென்ஸ் நின்றதால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நோயாளி இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ள ஒரு துயரச் சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள தனாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது நபர் உருவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்படவே, உடனே 108 ஆம்புலென்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்துக்கு வந்த 108 ஆம்புலென்ஸ் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலென்ஸ் நின்று விட்டது. 


உடனே வாகனத்தை சோதித்த 108 பைலட் வாகனத்தில் டீசல் இல்லை என்பதை தெரிவித்துள்ளார். மிகவும் கிராமப்புற சாலை என்பதால் வழியில் வேறு வாகனங்களும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. மாற்று ஆம்புலென்ஸுக்கு தகவல் தெரிவிக்க்ப்பட்டாலும், அது மற்றொரு நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதால், டீசல் இல்லாமல் நடுவழியில் நிற்கும் ஆம்புலென்ஸ் உள்ள இடத்திற்கு வர ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த வழியில் வந்தவர்கள் ஆம்புலென்ஸ் வாகனத்தை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவுக்கு தள்ளிச் சென்றுள்ளனர். அதன் பின்னர் டீசல் 500 ரூபாய்க்கு போடப்பட்டுள்ளது. அதன் பின்னரும் ஆம்புலென்ஸ் இயங்கவில்லை. 


இதனால் ஆம்புலென்ஸ் பைலட் மற்றும் அங்கு இருந்தவர்கள் செய்வதறியாது நின்றுள்ளனர். மேலும், பெட்ரோல் பங்கிற்கு வந்தவர்களும் உதவ முன்வரவில்லை. தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த ஆம்புலென்ஸ் சம்பவ இடத்திற்கு வர ஒரு மணி நேரம் ஆனதால், உடல் நலம் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். டீசல் இல்லாமல் நடு வழியில் நின்றதால் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த ராஜஸ்தான் மாநிலத்தையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 


இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் (அக்.29) இரவு பிரசவத்துக்காக பழங்குடியினப் பெண்ணான ரேஷ்மா 108 ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவரைக் கூட்டிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் எரிபொருள் இடையிலேயே தீர்ந்துள்ளது. இதனால் சாலையோரத்திலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, தொடர்ந்து அப்பெண்ணுக்கு பிரசவமும் பார்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த  வீடியோவில் சில சுகாதார ஊழியர்கள் தரையில் அமர்ந்து குழந்தையை பிரசவிக்கும் பெண்ணுக்கு உதவுவது பதிவாகி உள்ளது. நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் டீசல் தீர்ந்ததால் பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






வடமாநிலங்களில் தொடர்ந்து அரசு ஆம்புலென்ஸ்கள் டீசல் இல்லாமல் நோயாளிகளுடன்நடுவழியில் நிற்கும் அவலம் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்துள்ள சம்பவத்தால் அனைவருக்கும் அரசு ஆம்புலென்ஸ்கள் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது.