காங்கிரஸ் கட்சியின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ராஜாஜி. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி, மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவரின் கொள்ளுப்பேரன் சி.ஆர். கேசவன், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று திடீரென விலகியுள்ளார்.


காரணம் என்ன?


சர்ஜிக்கல் ஸ்டிரைக் விவகாரத்திலும் குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவி ஏற்ற விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி எதிர்வினையாற்றியதில் அதிருப்தியாக இருந்த சி.ஆர். கேசவன், தற்போது கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.


கட்சியில் இருந்து ராஜினாமா செய்திருப்பது குறித்து பேசியுள்ள அவர், "சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கான ஆதாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கோரியது வருத்தமளிக்கிறது. நான் அரசியல் செய்வது கட்சிக்கு ஒத்து வரவில்லை என்பதை உணர்ந்து, ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் கூட கலந்து கொள்ளவில்லை. இனி, இந்த கட்சியில் நான் பொறுத்தமானவர் இல்லை என்பதை உணர்கிறேன்.


குடியரசு தலைவர் பதவிக்கு திரௌபதி முர்முவின் வேட்புமனு அறிவிக்கப்பட்டபோது, ​​கட்சியின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஒருவர், அவர் ஒரு தீய தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று கூறினார். மற்றொரு கட்சி உறுப்பினர் இது போன்ற ஜனாதிபதியை எந்த நாடும் பெறக்கூடாது என்று கூறினார்"


கட்சியில் இருந்து விலகியிருப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "20 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அர்ப்பணிப்புடன் கட்சிக்காக உழைக்க வைத்த விழுமியத்தின் மதிப்பு தற்போது கட்சியில் இல்லை. கட்சி தற்போது எதை அடையாளப்படுத்துகிறதோ, எதைக் குறிக்கிறதோ, அல்லது முன் வைக்க முற்படுகிறதோ அவற்றுடன் நான் உடன்படுகிறேன் என்று இனி நல்ல மனசாட்சியுடன் என்னால் கூற முடியாது. 


முக்கிய பொறுப்பை நிராகரித்தேன்:


அதனால்தான் நான் சமீபத்தில் தேசிய அளவில் ஒரு பொறுப்பை நிராகரித்தேன். மேலும் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்பதைத் தவிர்த்தேன். நான் ஒரு புதிய பாதையை தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது.


எனவே, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததையும் தெரிவித்துவிட்டேன்" என்றார்.




வேறு கட்சியில் சேர்கிறாரா ராஜாஜியின் கொள்ளுப்பேரன்?


வேறு கட்சியில் சேர எண்ணம் இருக்கிறதா என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் வேறொரு கட்சிக்கு செல்வதாக ஊகங்கள் நிலவி வருகிறது. ஆனால், உண்மையை சொல்லபோனால் நான் யாரிடமும் பேசவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை" என்றார்.


ராஜாஜி என்று அழைக்கப்படும் சி ராஜகோபாலாச்சாரி, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் முக்கியப் பதவிகளிலும் இருந்துள்ளார்.நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் நபர்களில் இவரும் ஒருவர்.