நாட்டின் பெரும்பாலான பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வசதியாக ரயில்வே உள்ளது. மற்ற போக்குவரத்து வசதிகளை காட்டிலும், இதில் பயணிப்பதற்கான செலவு குறைவு. எனவே, ஏழை எளிய மக்கள் இதையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரயில்வே பெரிய பாதிப்பை சந்தித்தது. தற்போது நிலைமை சீராகி வரும் நிலையில், அதில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பயணிகள் பிரிவில் இந்தியன் ரயில்வேயின் வருவாய் 76 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பயணிகள் பிரிவில், இந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 43,324 கோடி ரூபாயை இந்தியன் ரயில்வே மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலக்கட்டத்தில் 24,631 கோடி ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 76 சதவிகிதம் அதிகரிப்பு.
இந்த நிதியாண்டில் இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில் இருந்து கிடைத்த வருவாய் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில், 22,904 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 34,303 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில் இருந்து கிடைத்த வருவாய், 9,021 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,728 கோடி ரூபாய் கிடைத்தது. இது 422 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில், ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 48.60 கோடியாக இருந்தது. அது, தற்போது 53.65 கோடியாக அதிகரித்துள்ளது.
மறுபுறம், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில், ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யாமல் பயணித்தவர்களின் எண்ணிக்கை 155 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 352.73 கோடி பயணிகள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 138.13 கோடியாக இருந்தது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரக்கு ரயிலை பொறுத்தவரை, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில், 978.72 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றப்பட்டது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 8 சதவிகிதம் அதிகரிப்பு. ஏப்ரல் முதல் நவம்பர் வரை 1,05,905 கோடி ரூபாயை மொத்த வருவாயாக ரயில்வே ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 16 சதவீதம் அதிகரிப்பாகும்.