சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலமான மோசடிகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. போலி கணக்குகள் மூலம் அறிமுகமாகி பணம் பறிப்பது என்பது பெரும் வழக்கமாகவே மாறியுள்ளது. அந்த வகையில் தான் அமெரிக்காவில் உள்ள பேராசிரியரிடம் இருந்து. டெல்லியை சேர்ந்த நபர் ரூ.39 லட்சத்தை மிரட்டி பறித்துள்ளார்.
சதியில் சிக்கிய அமெரிக்க பேராசிரியர்:
கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றும் ஒருவருக்கு, பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் பேச தொடங்கிய சில நாட்களிலேயே நெருங்கிப்பழகியுள்ளனர். பின்னர் வீடியோ சாட்டிலும் ஈடுபட்டவர்கள் ஆபாசமான செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்த நபர், தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆபாச வீடியோக்களை அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளனர். பின்பு தான், தன்னிடம் இத்தனை நாள் பேசியது ஒரு ஆண் எனவும், திட்டமிட்டு ஒரு பெண் மூலம் தான் இந்த சதி வலையில் வீழ்த்தப்பட்டதையும் அந்த பேராசிரியர் உணர்ந்துள்ளார்.
ரூ.39 லட்சம் பணம் பறிப்பு:
அடுத்தடுத்து வந்த மிரட்டலுக்கு பயந்து அந்த பேராசிரியரும் வீடியோவை வெளியிடாமல் இருக்க, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மோசடி நபருக்கு, பேபால் எனும் செயலி மூலமாக 48 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.39 லட்சத்தை வழங்கியுள்ளார். அதோடு நிறுத்தாமல், வகுப்புகளை புறக்கணித்து தனக்கு ஆன்லைனில் ஐபோன் சார்ஜர் மற்றும் இயர்போன்களை வாங்கித் தரவேண்டும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த பேராசிரியர், எஃபிஐ எனப்படும் அமெரிக்காவின் உயர்மட்ட விசாரணை அமைப்பிடம் மோசடி தொடர்பாக புகாரளித்தார்.
களமிறங்கிய சிபிஐ, எஃபிஐ:
பேராசிரியரின் புகார் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு எஃபிஐ அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பகுதியை சேர்ந்த ராகுல் எனும் முக்கிய குற்றவாளியை கைது செய்தனர். அவரது வசிப்பிடத்தில் இருந்து முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி உள்ளதாகவும், பேஸ்புக் மூலம் அறிமுகமான ராகுலின் கூட்டாளியை தேடி வருவதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயக்கத்தால் லாபம் பார்க்கும் மோசடி மன்னர்கள்:
இதனிடையே, சமூகவலைதளங்கள் மூலம் பழகி, ஆபாச வீடியோக்களை பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டப்படுவதாக கடந்த ஆண்டில் மட்டும் டெல்லி காவல்துறைக்கு 409 புகார்கள் வந்துள்ளன. இந்த எண்ணிக்கை நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரையில் மட்டுமே 1,469 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் குற்றச்சாட்டுகளை முன்வைக்க தயங்குவதால், பெரும்பாலான புகார்களில் வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. மொத்த புகார்களில் 2021ம் ஆண்டு 24-லும், நடப்பாண்டில் 44-லும் மட்டுமே இதுவரை டெல்லி காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.