ரயில் பெட்டிகளை விருப்பமுள்ள சுற்றுலா நடத்துனர்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம், கலாச்சாரம், மதம் மற்றும் இதர சுற்றுலா துறையின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள, இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த சுற்றுலா ரயில் திட்டங்களுக்கான கொள்கைகள், விதிமுறைகள், நிபந்தனைகளை உருவாக்க, நிர்வாக இயக்குனர் அளவிலான குழு ஒன்றையும் ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ரயில்வே அமைச்சகம் தெரிவிக்கையில், ஆர்வமுள்ள தரப்பினரின் விருப்பத்துக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. வெற்று ரயில் பெட்டிகளை (bare Shells) குத்தகைக்கு எடுக்க முடியும். ரயில் பெட்டிகளை விலைக்கு வாங்கவும் (Outright purchase) முடியும். குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறியளவிலான மாற்றங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு, ரயில் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க முடியும், ரயில் பெட்டிகளின் ஆயுள் வரை குத்தகையை நீட்டிக்க முடியும்.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களுக்கு எளிமையான பதிவு முறை மூலம் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், குத்தகை கட்டணம் உட்பட இதர நியாயமான கட்டணங்களை ரயில்வே விதிக்கும். விலைக்கு வாங்குபவர்களுக்கு குத்தகை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது
இதர அம்சங்கள்:
ரயில் பெட்டிகள் சீரமைப்பு மற்றும் பயண திட்டங்களுக்கு சரியான நேரத்தில் இந்திய ரயில்வே ஒப்புதல் அளிப்பது உறுதி செய்யப்படும்.
குத்தகை எடுப்பவர் ரயிலுக்குள் விளம்பரம் செய்யவும், ரயில் பெட்டிகளுக்கு பிராண்ட் பெயர்களை பயன்படுத்துவம் அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்தது.
இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய தளங்களுக்கு பொது மக்கள் சுற்றுலா செல்லும் வாய்ப்பை ரயில்வே அமைச்சகம் மேலும் எளிமைப்படுத்தியுள்ளது.
தனியார் பங்களிப்பு :
முன்னதாக, பயணிகள் ரயில் சேவையில் தனியார் முதலீட்டை அதிகப்படுத்தும் முயற்சியாக, 109 இணை பயணப்பாதைகளில் 151 நவீன ரயில்களை தனியார் பங்கேற்புடன் அறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்திய ரயில்வே கடந்தாண்டு அறிவித்தது. இதற்கான நிதி, கொள்முதல், இயக்குதல்,பராமரிப்பு ஆகியவற்றுக்கு தனியார் நிறுவனம் முழுவதுமாக பொறுப்பேற்றுக் கொள்ளும். ரூ.30,000 ஆயிரம் கோடி தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் திரட்டப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி முதல், போட்டி ஏலத்திற்கான விண்ணப்பங்களை இந்திய ரயில்வே அமைச்சகம் வரவேற்கத் தொடங்கியது. இதில், தனியார் மற்றும் பொதுத் துறைகளிடமிருந்து டெல்லி -1, டெல்லி -2, மும்பை -2 ஆகிய மூன்று கிளஸ்டர்களில் 29 ரயில்களை இயக்கவதற்கு ஏலம் பெறப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை மற்றும் இதர ஒன்பது கிளஸ்டர்களில் நவீன ரயில்களை இயக்குவதற்கு யாரும் ஏலம் கேட்கவில்லை.
இந்நிலையில், தனியார் சுற்றுலா ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விடும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக, இந்திய ரயில்வே 5,601 ரயில் பெட்டிகள் கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றியமைத்தது. கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய லேசான பாதிப்புடையவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த பெட்டிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், வாசிக்க:
Indian Railways News: ஏலம் கேட்க யாரும் இல்லை... சென்னையில் ஓடுமா தனியார் ரயில்?
Indian Railways News: ஏலம் கேட்க யாரும் இல்லை... சென்னையில் ஓடுமா தனியார் ரயில்?