அரசு-தனியார் கூட்டு முறையின் கீழ், சென்னை, டெல்லி, மும்பை என 12-க்கும் மேற்பட்ட ரயில்வே மண்டலங்களில் 151 ரயில்களை இயக்குவதற்கான போட்டி ஏலத்திற்கான விண்ணப்பங்களை இந்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 21ம் தேதி முதல் வரவேற்று வருகிறது.   


இந்திய ரயில்வே பயணிகள் ரயில் சேவையில் தனியார் முதலீட்டை  அதிகப்படுத்தும் முயற்சியாக, 109 இணை பயணப்பாதைகளில் 151 நவீன ரயில்களை தனியார் பங்கேற்புடன் அறிமுகப்படுத்தும் திட்டத்தை கடந்தாண்டு அறிவித்தது.


அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும் இந்த ரயில்கள், பெரும்பாலானவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். இதற்கான  நிதி, கொள்முதல், இயக்குதல்,பராமரிப்பு ஆகியவற்றுக்கு தனியார் நிறுவனம் முழுவதுமாக பொறுப்பேற்றுக் கொள்ளும். ரூ.30,000 ஆயிரம் கோடி தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் திரட்டப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.  




சென்னை கிளஸ்டர் ஏலம் கேட்கப்படவில்லை:  இந்நிலையில், கடந்த 21ம் தேதி முதல் போட்டி ஏலத்திற்கான விண்ணப்பங்களை இந்திய ரயில்வே அமைச்சகம் வரவேற்கத் தொடங்கியது. இதில், தனியார் மற்றும் பொதுத் துறைகளிடமிருந்து டெல்லி -1, டெல்லி -2, மும்பை -2 ஆகிய மூன்று கிளஸ்டர்களில் 29  ரயில்களை இயக்கவதற்கு ஏலம் பெறப்பட்டுள்ளது.இதன்மூலம், சுமார் ரூ. 7,200 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை மற்றும் இதர ஒன்பது கிளஸ்டர்களில் நவீன ரயில்களை இயக்குவதற்கு யாரும் ஏலம் கேட்கவில்லை. 



சென்னை கிளஸ்டரின் கீழ்,முன்மொழியப்பட்ட நவீன ரயில்கள்.


 


இதற்காக தேர்ந்தெடுக்கப்படும்  தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட இழுத்துச் செல்லும் கட்டணங்கள் (fixed haulage charges), நுகர்விற்கு ஏற்ப மின் கட்டணங்கள், வெளிப்படையான ஏல நடைமுறையின் மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாயில் (Gross Revenue) ஒரு பங்கு ஆகியவற்றை இந்திய ரயில்வேக்கு செலுத்த வேண்டும். இந்திய ரயில்வேயைச் சேர்ந்த ஒரு ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பாளர் ஆகியோரைக் கொண்டு இந்த வண்டிகள் செயல்பட வேண்டும். குறித்த நேரம், நம்பிக்கைத் தன்மை, வண்டிகளை முறையாகப் பராமரித்தல் போன்ற செயல்பாட்டிற்கான முக்கிய அளவீடுகளுக்கு பொருந்தும் வகையில் தனியார் நிறுவனங்கள்  இந்த ரயில்களை  செயல்படுத்த வேண்டும். 


மேலும், குறைந்த பராமரிப்பு தேவைப்படுகின்ற, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, பயணிகள் போக்குவரத்துத் துறையில் தேவைக்கான வழங்கலில் நிலவும் பற்றாக்குறையை குறைக்கும் வகையிலும் வண்டிகளை அறிமுகப்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும். தற்போதுள்ள பயணிகள் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்படமாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் முன்னதாக  தெளிவுபடுத்தியது. 


மேலும், வாசிக்க: 


97 ஆண்டுகள் பழமையான ரயில்வே பள்ளி: வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றி மூடத்திட்டம்! 


ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்... இந்த 5 ரயில்வே தடங்களைப் பாருங்க.. கண்டிப்பா இப்போ டூர் போகத்தோணும்..!